புளிய இலையாய்...
இந்தப் பாதை வழிகளை
வழிகளற்ற அடர் நிலங்களையும்
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.
உயிர் பயத்தோடு உணவிற்கான
உத்தரவாதமில்லாத போதும்
ஓர் முயல் அநுபவிக்கும்
விடுதலையை
உணரும்படியான ஒரு
வாழ்நாளிற்காகக் காத்திருக்கிறேன்.
திரும்பும் நிர்பந்தமற்ற
தொலைதூரப் பயணத்தில்
அவசர அவதிகளற்ற
நிதான ரசிப்பிற்கு இடமுள்ள
ஒரு நெடும்பயணத்தைத் தேடி
ஏங்கியபடியே
உறங்குவதும்கூட
மரணமாய் பயமுறுத்துகிறது.
சுடப்படமுடியாத காக்கையின்
சிறகில்
விழமுடியாத புளியமர இலையாய்
ஒட்டிக்கொண்டாலேனும்
பறவை யென்பதை உணருமா?
ஊஞ்சலின் முன்பின்னான அசைதலிற்கே
சார்வாங்கமும் நடுங்கிப்
பீதியடையும் பெண்வாழ்க்கைக்கு.
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.