ஒசந்த வெகுமதி!

உழைப்பாளர் தினமுன்னு ஏதோ
செலைக்கி(சிலைக்கு) மால மருவாதயெல்லாஜ் செஞ்சி
அரசு விடுமுறையில நல்லா ஓய்வெடுத்து
குடும்பத்தோட சந்தோசமா இருக்குற
உங்களைப்பாத்தா மனசு குளுருது அய்யா!
ஆனாலும்
மனசுல வலி இருக்குதுங்க!
தெரு கூட்ற எங்கள
ஏளனமா பாக்குறீங்களே...
சாக்கட அள்ளுற எங்கள புழுவ விட
கேவலமா நோக்குறீங்களே...
இன்னும் ...
காப்பி தண்ணி ஆத்துரவனையு(ம்)
சைக்கிள் ரிக்சா இழுக்கிரவனையு(ம்)
ஏதோ பாவப்பட்ட அடிம பிறவியாட்டமா
நக்கலா பாக்குறதும்...மரியாத இல்லாம கூப்பிடறதும்
ஏசி கார்ல வந்து ஏசியில சட்ட கசங்காம
உழைக்கிறோமுன்னு மமதயில
ஆபீஸ் பையன ஏதோ உங்க வீட்டு அடிமை மாதிரி
கேவலமா நடத்துறது எல்லாம் பாக்குறப்ப
மனசுல முள்ளா தைக்குதுங்க!
வயசுல எவளவு சின்னவங்களா இருந்தாலு(ம்)
நீங்க படிச்ச படிப்ப பெருசா மதிச்சி உங்கள
ஐயா..அம்மா..ன்னு மருவாதையா நாங்க கூப்புடுரோம்...
நீங்களோ வயசுக்கோ ஒத்த மனுஷ இனத்துக்கோ
மருவாத தரனும்முன்னு தோனாதவங்களா இருக்கிங்களே
என்ன படிச்சீங்களோ என்னவோ!.. அட போங்கப்பா!
எங்க உழைப்பு கூலியில கைய வச்சி
எங்க வயித்துல அடிக்கிற வலிய விட
மட்டு மரியாத இல்லாம அடிமையா
நெனைச்சி எங்க மனசுல அடிக்கிற வலி
ஈரக் கொலய நடுங்கவைக்கிற வலியப்பா ...
சக உயிர் இனத்தினனா
மதிப்பும் மரியாதையும் தர்ற காலத்ததா(ன்)
ரொம்ப பெரிய வெகுமதியா உழைப்பாளி
வர்க்கமான நாங்க எதிர்பார்க்குறோம்...
நீங்க நினைக்கிற மாதிரி கீழ் மட்ட
உழைப்பாளியான எங்களையும்
உங்களைப்போல மனுஷ ஜென்மம்முன்னு
மதிக்கிற பண்பான அன்ப இந்த வருசத்து
உழைப்பாளர் தின வெகுமதியா தந்தா போதுமப்பா!
நீங்க படிச்ச படிப்புக்கும் அது தான்
நீங்க தரும் ஒசந்த வெகுமதின்னு புரிஞ்சுக்கோங்கப்பா!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.