அன்பாகச் சிவமாக...!

மேகமாய் மலை உச்சியில்
நான் தவழ வேண்டும்
அமுதமாம் மழையாகிப்
பூமியில் பொழிய வேண்டும்
பாய்கின்ற ஆறாக
விரைந்து மண்ணில் ஓடி
காய்கின்ற நிலங்களுக்கு
நல்லுயிர் ஊட்ட வேண்டும்
மீனாகிக் கடலில் நீந்தி
மகிழ்ந்திடவே வேண்டும்
மானாகிக் காட்டில் துள்ளி
ஓடி மகிழ வேண்டும்
வண்டாகி மலர்கள் மேல்
அமர்ந்து மகிழ வேண்டும்
தேனுண்டு மனதாற
ரீங்காரம் செய்ய வேண்டும்
மயிலாகி தோகைகளை
விரித்திடவே வேண்டும்
அழகுறவே நடனமாடிக்
காண்போரை மகிழ்விக்க வேண்டும்
குயிலாகி இனிய குரலிசையில்
கூவிடவே வேண்டும்
துயில் எழுப்பும் இன்னிசையாய்
அது ஒலித்திடல் வேண்டும்
விழுதுகள் தாங்குகின்ற
ஆல மரமாக வேண்டும்
நிர்ப் பயமின்றி அண்டினோர்க்கு
நிழல் தரவே வேண்டும்
மனங்களிக்கும் தென்றலாய்
வீசிடவே வேண்டும்
அதை அனுபவிக்கும் அனைவருமே
அகம் குளிர்ந்திட வேண்டும்
பூத்துக் குலுங்குகின்ற
பூஞ் சோலையாக வேண்டும்
மாலையாகி மாலவனின்
மடியில் தவழ வேண்டும்
வேயாகி கண்ணன்
கையில் குழலாக வேண்டும்
தெவிட்டாது இனிக்கின்ற
இசையாக வேண்டும்
அலையாகி செந்திலவன்
கழல் தழுவ வேண்டும்
மலையாக ஓங்கி நின்று குமரன்
தாள் தாங்க வேண்டும்
பச்சைப் பசும் வயலினிலே
நெற்பயிராக வேண்டும்
இச்சைப்படி காற்றில் கலந்து
தலையசைக்க வேண்டும்
வான்வெளியில் ஒளிர்கின்ற
விண்மீனாக வேண்டும்
கண்குளிரக் காணும் வண்ணம்
வானவில்லாக வேண்டும்
காலமெலாம் உன் மடியில்
நான் துயிலவேண்டும்
காதலோடு கலக்கின்ற
உன் இதயமாக வேண்டும்
கனிவாக நான் விரும்பும்
தமிழ்ச் சொல்லாக வேண்டும்
இனிப்பாக மாறுகின்ற
உன் இதழாக வேண்டும்
இல்லறத்தில் இருக்கின்ற
நல்லன்பாக வேண்டும்
நாளெல்லாம் நான் விரும்பும்
நீயாக வேண்டும்
நாளைவரும் அந்நாளை
எதிர்பார்க்க வேண்டும்
இயற்கையாய் மாறி நான்
உன் இடையிலாட வேண்டும்
இனிமை தரும் தமிழாக
என்றும் வாழ வேண்டும்
அகிலத்தை ஆளுகின்ற
அன்பாக வேண்டும்
அன்பாகத் திகழ்கின்ற
சிவமாக வேண்டும்
அன்பாகச் சிவமாக
என்றுமாக வேண்டும்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.