கதறும் மழை
கிடைக்கவே கிடைக்காத
காதலின் கனம் போல
உயிர் தெறிக்கும் துளிகளாய் மழை.
ஆகப்பெரிய உருவமாய்
வானிற்கும் பூமிக்குமாய்
ஏக்கத்தில் விசும்பி எழுகிறது.
இதயம் புடைத்த பொழுதில்
பெருமூச்சின் வெப்பத்தில்
புழுங்கி அடங்குகிறது அடைமழை.
மூடியதும் குவிந்த இருட்டில்
நிறம்சொட்டி நினைவு கொட்டி
இருட்டோடு குருடாய் தடவும்
உயிரின் கைகள்
கொட்டிக் கொட்டி
என் உயிரெனக் கசிகிறது வானம்
மழைத்துளியின் வழியே.
மேல்வானுக்கும்
பூமியின் அடிக்குமாக
திமிர்ந்து கதறும்
மனதின் தணியாத ஏக்கமாய் கவிகிறது
முடியவேமுடியாத அடைமழை
என்னுருவில் உன்னருகில்...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.