காணாமல் போன கடிதங்கள்

என் பள்ளிப்பருவத்து
நினைவுகள்...
கடிதம் எழுதச் சொல்லி
வீடுதேடி வரும் உறவுகள்...
அவர்கள் எழுத நினைக்கும் அத்தனை
விஷயங்களையும் அப்படியே எழுதி
அவர்களிடம் வாசிக்கும்போது
அவர்களின் முகம் எதிர்பார்ப்பொன்றை
ஏந்தியிருக்கும்...
அக்கடிதத்தில் கோபம், குழைவு,
விசாரிப்பு, கண்டிப்பு, மகிழ்ச்சி
என்ற பலவிதமான உயிர்ப்புகளும்
இடம்பெற்றிருக்கும்...
ஊரிலிருந்து வரும்
கடிதங்களையெல்லாம்
அவர்கள் கொணர்ந்து
வாசிக்கும்போது
அவர்களது கண்களில் மகிழ்ச்சி
வெளித்தெரியும்...
கடிதம் எழுதப்போகும்போது...
எல்லாம் வல்ல இறைவன்
திருவருள் முன்னிற்க...
என்று தொடங்கி...
நிறைவில் வேணும் திருவருள்
என்று முடிக்கும்போது
அக்கடிதத்தில் பக்தி மணம்
பரவி இருக்கும்...
வரும் கடிதங்களையெல்லாம் வீட்டில்
ஒரு கம்பியை வளைத்து மாட்டியிருப்பர்...
அக்கடிதங்கள் ஒவ்வொன்றும்
உயிர்த்துடிப்பானவை...
அவை நடமாடும் மனிதர்களைப் போன்றவை...
நினைக்கின்ற போதெல்லாம்
கடிதத்தை எடுத்துப் பிரித்துப்
படித்து பார்க்கும் மனம் ஆறுதல் அடையும்...
அக்கடிதங்கள் உயிரோடு ஒட்டிய உறவுகள்...
பல காலத்தை மனதில் உலவவிடும்
உயிரோட்டங்கள்... வாழ்க்கையின்
ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைக்கும்
ஒளிப்படங்கள்...
தொலைதூரம் சென்ற
உறவுகள் கடிதங்களால்
உறவாடிய காலமது...
வேலை வேண்டி,
வெளியூருக்குச் சென்று தங்கியிருந்த
தந்தையிடமிருந்து
தவறாமல் கடிதங்கள்
வந்த நேரமது...
தபால்காரர் ‘தபால்’ என்று கூறி
அதனை என் தாயிடம்
கொடுத்துவிட்டுச் செல்லும்போது
அவரின் முகம்
என் தந்தையைப் பார்த்ததைப் போன்று
மகிழ்ச்சியில் ஒளிரும்...
கடிதத்தைப் பிரிக்கும்
அந்த நொடிப் பொழுதில்
முகம் முழுவதும்
மகிழ்ச்சியே மலர்ந்திருக்கும்...
படிக்கப் படிக்க
படிக்கும் உதடுகள்
சிரிப்பைத் தெறிக்கும்,
கேட்கும் செவிகள்
சுகமாய் தலையசைக்கும்.
கடிதங்கள் உறவுகளின்
இணைப்புப் பாலம்...
உணர்வுகள் சங்கமிக்கும்
சாகரம்...
இவற்றையெல்லாம்
பார்த்துவிட்ட பிறகு
என் உள்ளத்திற்குள் ஓர் ஆசை
நாமும் வளர்ந்து,
இருப்பிடம் விட்டு,
இடம் பெயரும்
காலங்களில் கடிதங்கள்
எழுத வேண்டும் என்று...
காலங்கள் ஓடின!
மாற்றங்கள் நிறைந்தன !
வாழ்க்கைப் பயணத்தில்
நானும் இடம் பெயர்ந்தேன் !
வாழ்க்கைப் படகைச் செலுத்திட
பொருள்தேடிப் புறப்பட்டேன்...
கூரை வீடுகள்
மாடி வீடுகளாக மாறின...
அவ்வீடுகளின் மேல்
அலைபேசிக் கோபுரங்கள்
ஆங்காங்கே முளைத்து விட்டன...!
அலைபேசி கொணர்ந்த
சுனாமியால் கடிதங்கள்
காணாமற் போய் விட்டன...!
மின்னஞ்சலுக்கும்,
குறுஞ் செய்திக்கும்
இவ்வுலகம்
அடிமைப்பட்டு விட்டது.
அன்பும், பண்பும்,
பாசமும் நிறைந்த...
அன்பு மிக்க...
எனத் தொடங்கி
கடிதம் எழுத கனாக் கண்ட நான்
காலத்தின் கோலத்தால்
ஹாய், ஹலோ... என்ற
என் மின்னஞ்சலையும்,
குறுஞ் செய்தியையும்
தொடங்குகிறேன்...
ஆர அமர்ந்து
யோசித்து, யோசித்து
உணர்வுகளைக் கொட்டி
உயிரையும் கொஞ்சம் கலந்து
உருகி, உருகி எழுதிய
கடிதங்களுக்குக் கல்லறை
கட்டப்பட்டு புற்கள் கூட
முளைத்து விட்டன…
குறுஞ்செய்திகளும்
மின்னஞ்சல்களும்
கடிதங்களைக் காவு கொண்டுவிட்டன…
சொற்ப நொடிகளில்,
பேருந்து நெரிசலில்,
கடைத் தெருவின் இரைச்சலில்,
குறுகிய நேரத்தில்
குறுஞ் செய்தி உருவாகி
என் உறவுகளுடனான
அன்பும், பாசமும்
சிறகொடிந்த
ஒரு பறவையைப் போல...
உயிர் வாழ்கிறது...
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.