தந்தை என்றும் தந்தைதான்!
ஊண் உறக்கம் தொலைக்கின்றான்
உடல் சோர உழைக்கின்றான்
குடும்ப வண்டி இழுக்கின்றான்
குறையாத மனபாரம் சுமக்கின்றான்
கண்ணான அருமை மகள்
கல்யாண கோலத்திலே மங்கலம் பெறும்
கடமை முடிக்கும் ஆவலில்
கண் கலங்கி நிற்கின்றான்...
பிரிவு சோகம் காக்கின்றான்
மன தைரியம் உள்ளவனாய் நடிக்கின்றான்
உடைபட்டுமனம் உள்ளூரக் குமுறுகின்றான்
தடையில்லா ஆறுதலை உதிர்க்கின்றான்
பெறும்போது இருந்த தாயின்வலியினும்
பெற்ற பிள்ளையைப் பாராட்டி சீராட்டி
பெருமைமிகு மணக்கோலம் காண
பொறுப்புடன் கடன்உடன் பட்டு கடமையாற்றும்
பொங்கிவரும் துயர்சுமக்கும் தந்தையின்வலி
பொறுமை பூமியினும் உயர்வின் உயர்வே!
தந்தை என்றும் தந்தைதான்
தன்னிகரில்லாத விந்தைதான்!
தரணியின் கோலம் நாகரிகமாற்றக் கந்தைதான்!
தப்பாமல் இன்றும் பொறுப்பின் சிகரம் எந்தைதான்!
தந்தையென கூடுசுமக்கும் என்நட்பு நத்தைதான்!
தவிக்கும் பரிதவிப்பில் விளைந்த கவி தத்தைநான்!
தந்தை கடமை கண்டேன்
விந்தை என்னுள் வென்றேன்
சந்தை படுத்தாது அன்பு பயின்றேன்
கந்தை ஆகிடாத பண்பாட்டுள்ளில் துயின்றேன்
எந்தையை மனக்கண்ணில் நிறுத்தும்
என் நண்பனுக்கு வாழ்த்துரைத்தேன்!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.