உனக்காக நான்...!
காலங்கள் பல கடந்தாலும்
உனக்காக நான் காத்திருக்கின்றேன்...
என்றும் என் உள்ளத்துள்
வேண்டாத விருந்துகள் வந்து
குடியேறிவிடக் கூடாதென...
நான்வேண்டி விரும்பும்
நீ என்று வருவாயென்று!
நீண்டு கிடக்கும்
காலமெனும் பாதையில்
என்னுடைய விழிகளைப் பதித்து
முரண்டு பிடிக்கும்
அறிவுக்குள் வித்தாக
உன்னை விதைத்து
துவண்டு கிடக்கும்
மனக்குடிலின் வாயிலில்
மலர்களை விரித்து
தேன் குடிக்கும் வண்டாக உன்
அன்பை நினைத்து
மண்ணூடே ஓடி
நீரைத் தேடும் வேரைப் போன்று
மரத்தைத் தேடி ஓடி
கிளை சுற்றும் கொடியைப் போன்று
தாயின் மடியைத் தேடி ஓடும்
பாலுக்கழும் குழவியாக
கடலைத் தேடி ஓடும்
காதல் மிகுஆறாக
உனைத் தேடி நானும்என்
உயிர் களைத்துப் போன பின்னர்...
இன்று,
என் மனக் கதவின்
ஒரு ஓரத்தில்...
ஓடுமீன் ஓட
உறுமீன் வருமளவும் காத்திருக்கும்
கொக்கினைப் போன்று
உனக்காக நான் காத்திருக்கின்றேன்...
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.