இரக்கமற்ற வெய்யில்
பட்டுப்போல் இருக்கின்ற குழந்தை உடலைப்
பவளம்போல் சிவக்கவைத்தே எரியச் செய்தாய் !
திட்டுதிட்டாய்க் கொப்புளங்கள் எழுப்பிப் பஞ்சுத்
திருமேனி முழுவதுமே புண்ணாய் செய்தாய் !
கொட்டுகின்ற வியர்வையிலே குழந்தை மேனி
கொதித்திடவே அழுகையிலே துடிக்கச் செய்தாய் !
சிட்டுபோல அங்குமிங்கும் நடந்து கன்னச்
சிரிப்புதிர்த்த முகந்தன்னைக் கறுக்கச் செய்தாய் !
மரங்களினை மொட்டையாக்கி வீசும் காற்றை
மண்தரையை சூடேற்றி நெருப்பாய் மாற்றி
விரலளவு நிழல்கூட விழாம லாக்கி
விளையாடச் சிறுவர்க்குத் தடையாய் நின்றாய் !
சிரம்வெளியே காட்டுதற்குப் பெரியோ ரையும்
சிந்திக்க வைத்துவீட்டுள் முடக்கி வைத்தாய் !
வரமாகப் பிள்ளைபேறு பெற்ற பெண்ணை
வயிற்றுடனே பெருமூச்சில் நெளிய வைத்தாய் !
குளத்துநீரை வற்றவைத்தாய் பரந்தி ருந்த
குளுமையான ஏரியையும் காய வைத்தாய்
களத்துமேட்டுப் புல்கருகப் பறவை யெல்லாம்
கண்மயங்கி நாவறளச் சுருண்டு வீழ
வளமுடையோர் குளிர்பதன அறைக்குள் தங்க
வறுமையாளர் வயிற்றுக்காய் உழைக்கக் கண்டும்
உளந்தன்னில் இரக்கமில்லாக் கயவர் போல
உக்கிரமாய் வெய்யிலேநீ தீய்த்தல் நன்றோ !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.