சின்னச்சின்ன கவிதைகள்
அதுமட்டும் ஏன் இல்லை?
சலவைத்தூள்
ஒன்றுதவிரச்
சகலமும்
இடம் பெற்றுவிட்டன
எங்களது
புதிய சூத்திரம்
பற்பசைகளில் -
இருந்தாலும்
விடாது
படிக்கிறோம்
ஆலும் வேலும்...
*****
உயிர்வாழாதோர்
அழகுநிலைய
வாயில்களில்
அபரிமிதக்
கூட்டம்
பிரேசில்
காடுகளிலிருந்து
வரும்
எர்வோமேடினுக்காக
இங்கே இருக்கும்
கவரிமான்கள்
*****
குறுக்கு வழி
இன்று
யாருக்கும்
பொறுமை இல்லை
அதனால்தான்
படிப்படியாய்
முன்னேறுவதை
விட்டுவிட்டுப்
பட்டென்று
மின்ஏணி
தேடுகிறார்கள்
*****
சுயநலவாதிகள்
தானுண்டு
தன் வேலையுண்டு
என்று
இருக்கிறார்கள்
*****
முடியாதது?
ஆட்சிகளும் சரி
ஆசைகளும் சரி
முடி துறப்பதில்தான்
முடிகிறது
*****
உணவுப் பாதுகாப்பு
வெளிநாட்டு
முதலீட்டாளர்கள்
வீதியோரம் விற்கும்
பணியாரத்தை
விரும்பிச் சாப்பிட
இங்கே இருக்கும்
தொழிலாளிகள்
ஃபாஸ்ட்ஃபுட்
தேடுகிறார்கள்
*****
இளைய தலைமுறை
வேகாத வெயிலிலும்
விறைப்பாக
டை கட்டிக் கொண்டு
விற்பனைப் பிரதிநிதியாய்
வியர்த்தாலும்
வியர்ப்போமே தவிர...
விவசாய வேலையை மட்டும்
விரும்பவே மாட்டோம்
*****
வி்டைபெற்றுக் கொண்ட வேறுபாடு
மனிதன் காடுகளில்
வாழ்ந்தபோது
அவனுக்கும்
விலங்குகளுக்கும்
வேறுபாடு இருந்தது
நாகரிகம்
என்ற பெயரில்
நாடுகளை உருவாக்கியபின்
வேறுபாடு
விடைபெற்றுக் கொண்டது.
- சுப.தனபாலன், திண்டுக்கல்.
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|