மண்டை ஓடு நினைவு!
முனியாண்டி கோவில்
புளிய மரத்தடியில்
புளியங்காய் பொறுக்கும் போது
பார்த்ததுண்டு சில
மண்டையோடுகளை...
தினவோடு செருக்கித் திரிந்த
முந்தைய தலைமுறையின்
மண்டையோட்டில் புளியங்காய்கள்
சிதறிக் கிடக்கும்.
மண்டையோடுகளில்
சிதையாத பல்வரிசையை
பொறாமையோடு பார்ப்பாள்
ஓட்டைப் பல்லி நெட்டத் தனம்.
“ஏண்டி, வீட்டுக்கு எடுத்துட்டுப் போலாமா?
ஆவலாய்க் கேட்கும் கோமதியை
புளியமரத்துக் காத்து
பீதிகொள்ளச் செய்யும்.
எத்தனை பகல் இரவுகள் கடந்தும்
பல்லிழித்த மண்டையோடுகள்
கூடவே வருகின்றன
புளியங்காய்ச் சுவையோடு!
எனது மண்டையோட்டை
இன்னொரு சிறுமி எத்தும்வரை
என் ஓட்டின் உள்ளிருக்கும்
புளியம் பூக்கள்.
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.