மீட்போம் தமிழகத்தை...!
சிந்திக்கும் ஆற்றலொடு விழிப்பு ணர்வும்
சிறிதுமில்லை என்பதினை நன்க றிந்தே
இந்தியாவின் குப்பைகொட்டும் தொட்டி யாக
இனியதமிழ் மாநிலத்தைத் தேர்ந்தெ டுத்தார்
எந்தவொரு ஆய்வெனினும் சோத னைக்கே
ஏற்றதொரு நிலமாக ஆக்கி விட்டார்
மந்தியொடு எலிகளாகத் தமிழர் தம்மை
மாற்றியின்று சோதனைகள் நடத்து கின்றார் !
அழிவென்று பிறரெல்லாம் ஒதுக்கி விட்ட
அணுஉலையைக் கூடங்கு ளத்தில் வைத்தார்
வழியடைத்துப் பிறரெல்லாம் துரத்தி விட்ட
வாயுவெனும் மீத்தேனை இங்கெ டுத்தார்
விழிப்போடு பிறரெல்லாம் வேண்டா மென்றே
விரட்டிவிட்ட நியூட்ரினோ ஆய்வுக் கூடக்
குழிபறிக்கத் தேவாரச் சிற்றூர் தம்மைக்
குறிவைத்தே பணிகளினைத் தொடங்கி விட்டார் !
ஆற்றுமணல் மட்டுமன்றித் தேரிக் காட்டின்
அரிதான கடல்மணலைக் கொள்ளை யிட்டார்
நேற்றுவரை நமையெல்லாம் காத்து நின்ற
நெடிதான மலைகளினைத் தகர்த்து விட்டார்
காற்றுமழை காடழித்தே தடுத்து விட்டார்
கண்முன்னே தமிழகத்தைப் பாலை செய்தார்
சோற்றுக்கும் வழியற்றுச் சாகும் முன்னர்
சொரணையுடன் சேர்ந்தெழுந்தே மீட்போம் மண்ணை!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.