மேகத்தின் இதயம்...!
மேகம் தனது காதலியிடம்
செய்தி சொல்வதற்காக
இன்னொரு மேகத்தைத் தூதுவிடுத்தது...
தூதுபோன மேகம் வந்து சேரவில்லை...
கவலையுற்ற மேகத்தின்
முகம் கருத்தது
இதயம் கனத்துக் கண்ணீர் விட்டது...
அதனைக் கண்டமற்றொரு மேகம்
கண்ணீர் விடும் கார்மேகத்தைப் பார்த்து
ஏ...மேகமே மேகமே
ஏன் நீ அழுகிறாய்...!
நீ உன்னவளுக்கு
தூதுவிட்ட மேகங்கள்
பாதி வழியிலேயே மழையாய்க்
கரைந்து போனதற்காக...வா
அழுகிறாய்...!
அழாதே...! அதோ பார்...!
அடுத்த ஒரு மேகம் தவழ்ந்து
வருகிறது... அதனிடம்
உன் உள்ளத்தில் உள்ளதைச்
சொல்லிவிடு...
அதுவாவது
போய் உன்னவளிடம்
உன் எண்ணத்தைச் சென்று கூறிவிடும்...!
அதைக்கேட்ட கார்மேகம்
வானவில் எனும் வண்ணத்
தூரிகை எடுத்துத் தன் கண்ணீரையே
தொட்டு எழுதி தன் எண்ணத்தைக்
கூறித் தூதுவிடுத்தது...
மேகத்தின் எண்ணங்களை
காற்றில் கடிதில் மிதந்து சென்ற
மற்றொரு மேகம் கனத்த
இதயத்துடன் எடுத்துச் சென்றது...
அம்மேகம் எடுத்துச் சென்றது...
எண்ணங்களை மட்டுமல்ல...
அக்கார்மேகத்தின் இதயத்தையல்லவா...
சுமந்து சென்றது... ... ...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.