அன்பின் எல்லை...?
அன்பெல்லாம் உடன் கூட்டி
பண்பெல்லாம் பின் கொட்டி
பெற்றிட்டாள் ஒரு மகன்
வளர்த்திட்டாள் அத்திரு மகன்
அழகையே உடல் கொண்டு
பண்பிலே உருக்கொண்டு
வளர்ந்திட்டான் செல்லமகன்
அன்னையின் கடமை முடிந்ததோ?
தந்தையின் கடமை தொடர்ந்ததோ?
பாங்குடன் கல்வி கற்பித்தார்
கல்லூரி வரை செல்வித்தார்
கட்டிளங் காளையவன்
கலையுடன் வளர்ந்திட்டான்
மன்மதன் கலையில் வல்லவனோ
மாணவன் தான் வெல்வானோ
அவள் வலை வீழ்ந்திட்டான்
இளங்கன்னியவள் வட்டமுகம்
இளம்பிறைதனில் அழகு முகம்
கொடி இடைதானோ
பிடி நடைதானோ
என்றெல்லாம் கூறும் தமிழ்
அவள் கூறும் மொழிதானோ
புலவனோ என்றால் இல்லை
மலர் வில்லான் வேலை
அவன் மலர்மொழி பேசுகிறான்
மயங்கிட்டான் மாணவன்தான்
மணம் முடிக்க உடன் பட்டான்
வாக்குறுதி தந்திட்டான்
வாஞ்சையுடன் நோக்கிட்டாள்
உண்மைக் காதல் என்றெண்ணிட்டாள்
உயிரைக் கொடுப்பேன் என்றிட்டாள்
அத்தனையும் பொய்யென உணராமல்
அவன் ஆசைக்கு உடன்பட்டாள்
கற்பினையையே இழந்திட்டாள்
கணநேரம் சிந்தித்தாள்...
கண்ணீரை பெருக்கிட்டாள்...
கவலையை விடு... நிச்சயம் வருவேன் என சென்றிட்டான்
சென்றவன் வருவானோ சிந்தையை மகிழ்விக்க
சென்றதே நாட்கள்... பல... சென்றவனும் வரவில்லை
கன்னியவள் பயந்திட்டாள் பெற்றவர்களுக்கு
கரங்குவித்து மன்னிப்பு கேட்டாள் மனதிற்குள்
பெற்றவரை உறவுகளை மறந்திட்டாள்
பெருந்தொல்லை ஒழிந்தது எனக்கூறி
பொத்தென்று கிணற்றில் குதித்திட்டாள்
பொல்லாத காதலை உணர்ந்திட்டாள்
அவள் கண்ட அன்பின் எல்லை இதுதானோ...!
- சரஸ்வதி ராசேந்திரன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.