உலகம் யார் கையில்...?
உழைப்பாலே உயருகின்ற தத்து வத்தை
உலகமக்கள் உணர்கையிலே உண்டு வாழ்வு!
இழையான உழைப்பாலே நெய்யும் பட்டு
இமையான வெற்றிக்குப் பாது காப்பு
பிழைக்கவழி இதுவென்றே அறிந்து போற்ற
பிழையில்லா வாழ்வன்றோ உலகில் தங்கும்!
தழைக்கின்ற வாழ்வுக்கு வேராய் நிற்கும்
தரமான உழைப்பென்றே சொல்வோம் நாளும்!
உழைப்போர்க்கு விரலனைத்தும் ஆயுதம் என்போம்!
உழைப்பாளி இல்லாத உலகம் பாழ்தான்!
உழைக்கின்ற மனத்தோர்க்கு மார்க்கம் உண்டு!
உண்மையிலே அழியாத அதுதான் செல்வம்!
உழைப்பாலே பொருள்சேரும் உண்மை! உண்மை!!
உற்சாகப் பிறப்பாலே இன்பம் பொங்கும்!
உழைப்போரைக் கொண்டநாடு இன்ப வீடு!
உலகத்தின் சொர்கமது வென்றே பாடு!
உழைப்பவன் கைக்குள்ளே உள்ள தடா
உலகம்! மெய் பைக்குள்ளே இருந்தே தோன்றும்
உழைப்பாலே பேரமைதி தங்கும் எங்கும்!
உழைப்பொன்றே அனைவர்க்கும் பொது வான
பழமைமொழி என்றுரைத்தால் பொய்யே இல்லை!
பண்பான உழைப்பாலே உயர்ந்தார் நல்லோர்
தழைக்கின்ற உழைப்பாலே உள்ளங் கையில்
தங்கிடுமே பனித்துளியாய் உலகம் தானே!
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.