பேய்களின் நாட்டில்...
பிணையம் வைத்த உயிருக்கும்
பிணையம் வைக்கப்பட்ட
வாழ்க்கைக்கும் இடையே நான்
கையாலாகாதிருக்கிறேன்.
காயாத தொப்பூழ்க்கொடியோடு
தொண்டைக்குழிக்குள்
மரணம் விழுங்கும்
பெண் சிசுக்களுக்குள்
எனது உயிரிருப்பு ஏளனப்படுகிறது...
கொன்று வீசப்பட்டு
நாய்கவ்வி இழுக்கும்
பிஞ்சுப் பிணங்களில்
நாறுகிறது உலகத்து இறையாண்மை
மானுட மேன்மைகள்
குதறப்பட்டு நாய்ப்பற்களில்...
பிணத்தைக் குதறும் நாய்களுக்கு
மன்னிப்பளிக்கலாம்.
பிணமாக்கும் காட்டு மிராண்டிகளுக்கு
உதவி செய்து
அதை நியாயப்படுத்தும்
பேய்களின் நாட்டில்...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.