உழவும் உழவரும்

கயலினம் திரிந்த ஆறும்
கழிவுநீர் கலந்து வீணாய்
கடலிலே மாய்ந்தே போச்சு
வயல்களில் திரிந்த மாடு
வயிற்றுக்கு உணவேயாக
அடிமாடாய் ஆகியாங்கு
வண்டியில் ஏற்றலாச்சு
கருவேலா மரங்கள் நின்ற
பெருங்கரை கண்மாய் எல்லாம்
பெரும் பெரும் மனைகளாச்சு
கண்மாயும் மாய்ந்தே போச்சு
மனிதனைச் சுமக்கும் மண்ணும்
மலடாகிப் போயுமாங்கே
நோயாளி ஆகிப் போச்சே!
வயல்களும் தூர்ந்துபோக
வளமான நீரோடை போக
வாரிகள் மறைந்து போக
வளம் நிறை குளங்கள் வறள
வளமனை உழவன் வீடும்
வறட்சியால் நொந்து போக
உழவையும் கைவிட்டாங்கு
உழவன் நகர் நோக்கிச் சென்றானம்மா!
மழையின்றி வயல்கள் வறள
மனதினால் உழவர் மறுக
வீட்டுமனை விற்போர் வந்து
விற்றிடு என்று கூற
விதியினை நொந்த உழவர்
வேறினி என்செய்வோம் என்று
இருக்கிற வயலை எல்லாம்
சுருக்கென்ற மனம் நடுங்க
நறுக்கென்று விற்றானம்மா தெருவில்
நடுங்கிப் போய் நின்றா னந்தோ!
நோக்கியா செல்லைப் பார்ப்பார்
நொடிக்கும் நல் இதயம் பாரார்
கிரிக்கெட்டின் வளர்ச்சி பார்ப்பார்
கிழிகின்ற உழவர் வாழ்வை
என்றுமே திரும்பிப் பாரார்
குளங்களும் ஆறும் இங்கு
மனையிடமாகிப் போக
உழவுக்கு நீருமின்றி
உழவரும் வருந்தி நிற்க!
உள்நாட்டுக் கட்சிச் சண்டை
உழவரின் உள்ளத்தையே
நார்நாராய்க் கிழித்ததம்மா...!
காடுகள் அழிந்து போக
கானக மயில்கள் சாக
தண்ணீர் நிறைந்திருந்த
தாமரைக் குளங்கள் காய
கொண்டல்கள் கொடுக்கும் நீரோ
கொடுமையாய்க் குறைந்து போக
வளங்கொழித்த வயல்கள் எல்லாம்
வறுமையால் நைந்துவிட்ட
உழவரின் அடுப்பைப் போன்று
உலரியே காய்ந்த தம்மா...!
உலகிற்கே சோறுபோடும்
உழவர்க்குச் சோகம் ஆங்கே
உறைந்திட்ட சொத்தாய்ப் போச்சு
முப்போகம் விளைந்த மண்ணில்
எப்போதும் தற்கொலையே
தப்பாது நடக்குதம்மா...!
உலகம் தறிகெட்டுப் போகுதம்மா!
தரணியில் வாழுகின்ற
தன்னிகர் உயிர்களெல்லாம்
தொடர்கின்ற தொல்லையாலே
தொலைந்துதான் போன தந்தோ!
தொலைந்தது உழவர் வாழ்வு
தொடர்ந்தது உலகமயமே
தொன்மையாம் பண்பு போக
தொடர்ந்ததே துன்ப வாழ்வு...!
மாற்றமும் தொடர்ந்து வரலாம்
மாறுமோ மனிதர் வாழ்வு?
உலகிற்கே உணவளிக்கும்
உழவரின் வாழ்வு காக்க
உலகோரே திரண்டு வாரீர்!
உலகமே செழித்து வாழ
உழவையும் உழவரையும்
உயர்த்தியே நாமும் வாழ்வோம்!
உலகமே செழிக்குமம்மா!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.