பணம் படுத்தும் பாடு
தனந்தான் உள்ளே வந்ததுமே
மனந்தான் வெளியே போனதுவே
கணமும் நகைத்த முகமதிலே
சினமும் கடிந்து வந்ததுவே
பணமும் வந்து சேர்ந்ததுமே
குணமும் மாறிப் போனதுவே
வணக்கம் வைத்துச் சென்றதுமே
பிணக்கும் ஆகி சோர்ந்ததுவே!
பார்க்கும் பார்வை திமிராலே
யார்க்கும் அஞ்சா மனிதரானார்
சேர்த்த பணத்தின் செருக்காலே
மூர்க்க குணமே தினம்வளர்த்தார்
சுடுஞ்சொல் நாவில் உரைத்திட்டே
கொடுந்தேள் மாயம் செய்திடுவார்
இனிமை வாழ்வை தொலைத்திட்டே
தனிமை சிறையில் தவிக்கின்றார்
செருக்கு குணத்தை விடுத்தாலே
விருப்பும் அவர்மேல் வந்திடுமே
மதிப்பும் தானே உயர்ந்திடுமே
கொதிப்பு அகமும் அடங்கிடுமே!
- விஜயகுமார் வேல்முருகன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.