விரும்பும் நல்லறம்!
சூடும் மல்லி பூவும் வாசம்
சேரும் மணநாளில்
பாடும் பாட்டு வாராய் தோழி
பாகாய் இசைந்தோடக்
காட்டும் நாணச் சிவப்பு பெண்ணின்
கன்னம் தொடுமதுவே
ஏடும் சொல்லித் தாரா இன்பம்
எழுதும் இல்லறமே!
இல்லம் இனிக்க வந்த மழலை
இன்ப ஊற்றாகும்
சொல்லும் செயலும் ஒன்றாய் நடக்க
சோர்வு ஈற்றாகும்
வெல்லம் நிகர்த்த மொழியே வாழ்வில்
வேண்டும் நாற்றாகும்
வல்லம் பொறுமை இல்லம் வாய்த்தால்
வளமை நூற்றாகும்!
நூற்று ஆண்டு கடந்தும் ஒருமை
நுகரும் மனையறமே
காற்று புகாது மாசில் லாமல் நகரும்
கடமை எழில்வரமே
நாற்று வயலில் ஆண்பெண் சேர்ந்து
நடக்கும் உழவதுபோல்
வேற்று மையே இல்லா இல்லம்
வேட்கை நல்லறமே!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.