பொறாமைப்படு
நம்மிலெழும் ஓருணர்வு பொறாமை என்றார்
நம்முணர்வை நாம்வெறுத்தல் நன்றோ சொல்வீர்
நம்கண்ணை நம்விரலால் குத்தல் நன்றோ
நலமுடனே நாமிருக்க அதுவும் இன்று
நம்மவர்க்கு தேவையன்றோ! உணர்வீர் நீரே !
நல்லவர்கள் எல்லோரும் பொறாமை தன்னை
தம்முணர்வாய் தரணியிலே மதித்துப் போற்றி
தகைசான்ற புகழ்தன்னை பெற்றார் அன்றோ !
ஆசைவெறுப்பு ஒருங்கிணைந்த உந்து சக்தி
ஆகையினால் கொள்வோமே பொறமை பக்தி
ஓசையின்றி அடக்குவதே நமது யுக்தி
ஓருடலில் ஓருயிர்போல் இருக்கும் ஒன்றாய்
விசையைப்போல் எவர்க்குமது பயக்கும் துன்பம்
விருப்பமுடன் அதைமாற்றப் பிறக்கும் இன்பம்!
திசையெட்டும் பரவிநிற்கும் பொறாமை தன்னை
திறமையுடன் கையாளவே சிறக்கும் வாழ்வு!
பொறாமை மீது பொறாமையின்றி அதனை நாமே
பொறுமையுடன் ஆசை வெறுப்பாய் பிரித்துக் கொள்வோம்
பொறாமைப்படுபவன் பாக்கியவான்! வெற்றி
பெறுபவனும் அவனேதான்! ஆசையினை
மாறாக் குறிக்கோளாய் மாற்றி என்றும்
மாந்தரினம் செயல்பட்டால் வெறுப்பு நீங்கும்
பொறாமையும்தான் மடிந்துபோகும்! இனியும் நாமே
பொறுமையுடன் பொறாமை நீக்க வகுப்போம் திட்டம்!!
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.