மரணம் இனிது!
இனிது இனிது வாழ்க்கை இனிது...
அதனினும் இனிது
மரணம் இனிதே...
மரணம் இனிதா...?
மரணத்திற்குச் சிலர் அஞ்சுவர்
மரண பயம் மனிதனை வதைக்கும்
சிலர் மரணத்தோடு
போராடிக் கொண்டே இருப்பர்
சிலர் மரணத்திற்காக ஏங்குவர்
பாவத்தின் சம்பளம்
மரணம் என்பர்...
மரணம் மனிதனை
ஸ்மரணிக்கச் செய்துவிடுமாம்
எனக்கு ஏனோ மரணத்தைக் கண்டு
பயமே இல்லை...
மாறாக விருப்பமே மேலோங்குகின்றது
என்ன வியப்பாக இருக்கிறதா...
நான் மரணிப்பதில்லை...
மாறாக மறுபிறப்பு எடுக்கிறேன்...
மரணித்தால் தானே
மறுபிறப்பெடுக்க முடியும்
மறுபிறப்புத் தானே நம்மை ஒன்று சேர்க்கும்
இயற்கையே மரணத்தைத் தருகிறது
இயற்கையான மரணமே
இறைவன் விதித்தது...
அதுவே மறுபிறப்பைத் தரும்
அதனால் தான் நான் மரணத்தை
நேசிக்கிறேன்...
ஆம்... மரணித்த பின் அடுத்த பிறவியில்
உன்னுடன் சேரப் போவதை நினைக்கையில்
மரணம் கூட எனக்கு இனிதுதான்!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.