தலைகுனிந்தார்
பேருந்து நிலையத்தில் நின்ற போது
பேசுதற்கே பக்கத்தில் ஒருவர் வந்தே
பாருங்கள் உங்களைநான் முன்னர் ங்கோ
பார்த்திட்ட நினைவானால் தெரியவில்லை
ஊருக்குள் எங்கேநீர் இருக்கின்றீர்கள்
உறவினர்கள் இங்காரும் இருக்கின்றாரா
கூறுங்கள் என்றவர்தாம் கேட்கக் கேட்கக்
கூர்ந்தவரைப் பார்த்தவாறு நின்றிருந்தேன் !
என்னையவர் விடுவதாகத் தெரியவில்லை
ஏனுங்க முகநூலில் இருக்கின்றீரா
நன்றாக என்முகத்தைப் பார்த்துக் கேட்க
நானெந்த நூலிலுமே இல்லை என்றேன்
முன்பின்னும் தலைசொரிந்து சுட்டுரையில்
முகந்தன்னைப் பார்த்தேனோ என்று கேட்க
என்நெஞ்சுள் வந்திட்ட சிரிப்படக்கி
எனக்கெந்த உரைநடையும் தெரியாதென்றேன் !
முகநூலில் சுட்டுரையில் இல்லை யென்றால்
முகந்தன்னைப் பார்த்ததெங்கே என்றே தம்மின்
முகந்தன்னைக் கோணலாக்கி வாயிற்குள்ளே
முணுமுணுத்தே கண்பிதுங்க மீண்டும் கேட்டார்
முகநூலில் சுட்டுரையில் தேடித்தேடி
முன்வீட்டில் குடியிருக்கும் எனைமறந்தீர்
அகநூலில் அடுத்துள்ளோர் முகம்பதித்தே
அடுத்தநாட்டைப் பாரென்றேன் தலைகுனிந்தார்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.