உரையாடல்...!
பொழப்பே எழவெடுத்த பய
பொழப்பாப் போச்சு
பொறந்த வீட்டுலதேஞ் சீரழிவுன்னா
போன எடத்துலயும் வாதனதேன்.
பெத்தவனும் கட்டுனவனம்
பந்தாட்டாம் ஆடுனா
பொட்டச்சி பொழப்பு காத்துப்புழுதிதேன.
என்னத்தச் சொல்ல?
என்னிக்குத்தெ எம்பாடு தீருமோ
இல்ல- மண்டையோடதேம் போகுமோ?
“ஏக்கா மயிலக்கா
இத்தினின்டு ஊறுகா குடு,
ஏண்டி முந்தாநாளு பெத்தியே
இன்னிக்கு எங்கடிங்குறாளுக
இவளுக யோக்கியம் மாதிரி“
பொட்டயக் கொண்டுபுட்டுதே
களையெடுக்க வந்தேன்.”
“ம்... போதும்.. போதும்...
ஊறுகால்லாம்
தொட்டுச் சாப்புடக் கூடாது
பாத்துக்கிட்டே தின்னுறனும்.
அம்புட்டு வசதியிலயா நாம இருக்கோம்”
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.