தொடரும் நினைவுகள்...!

எத்தனையோ தருணங்கள்
நம்மைத் தாண்டித் தாண்டிப் போயிருக்கின்றன...!
அத்தருணங்கள் மீண்டும் வரப்போவதில்லை...!
ஆனால் அத்தருணங்களை நாம் எப்போதும்
யாருக்கும் தெரியாமல் மனதிற்குள்
அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்...!
உன்னோடு அமர்ந்து உரையாடும்
ஒவ்வொரு தருணமும்
வாழ்நாளின் வாழ்ந்த நாளாக
என் வாழ்வில் பதிவு செய்யப்படும்...!
உன்னோடு அமர்ந்து வாழ்வின்
யதார்த்தங்களைப் பேசும் போது
உலகத்தை மறக்கிறேன்!
உனையே உலகமாய் சுகிக்கிறேன்
என் துக்கங்களை
உன்னோடு பகிர்ந்து கொள்கையில்
எனக்காக நீ வருந்துவதை
முழுவதுமாய்த் தவிர்க்கிறேன்!
என் சுகங்களைச் சொல்லும் போது
உனது முத்துப்பல் தெறிக்க
நீ சிரிப்பதை ரசிக்கிறேன்!
வாழ்வில் பெற்ற வெற்றிகளை
உன்னோடு பகிர்ந்து கொள்ளும்போது...
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்
சிறுவனாகி விடுகின்றேன்...!
வாழ்வில் தடுமாறும்போதெல்லாம்
"உனக்காக நான் இருக்கிறேன்"
எனும் மந்திர வார்த்தைகளை
நீ மயிலிறகாய் வருடி விடும் போது
தடம் மாறாமல் இருக்கிறேன்!
இத்தனையும் மொத்தமாய் எனக்குச் செய்து
எனை மனிதனாக செதுக்கியவளே...!
என்றும் என் வாழ்க்கை
உன் காதல் நினைவுகளில்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது...!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.