கலாம் கனவு நனவாக வேண்டும்!
பதவி பணம் வந்தாலே
மக்கள் உடை மாறிவிடும்
அவரின் நடையும் மாறிவிடும்
எந்த நிலை வந்தாலும்
முந்தைய நிலை மறக்காத
முதல் குடிமகன் கலாம்.
இந்தியாவின் உயர் அதிகாரம்
அரண்மனையை மிஞ்சும் மாளிகை
எண்ணற்ற பணியாட்கள்
எதுவும் இவரை மாற்றவில்லை
எளிமையாய் துறவி போல் வாழ்ந்த
மக்கள் ஜனாதிபதி கலாம்.
ஒருவர் உயர் பதவி பெற்றால்
அவர் சொந்தமெல்லாம் வந்து சேரும்
உறவெல்லாம் பலனடையும்
கலாம் பதவி ஏற்ற பின்னே
இது எதுவும் நடக்கவில்லை
மக்கள் மட்டுமே அங்கு வந்தனர்
இப்படியும் ஒரு தலைவரா?
என்றே வியந்து சென்றனர்.
அரசியல்வாதியைக் காக்கா பிடிக்கவில்லை
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை
தாம் செல்லுமிடமெல்லாம்
மாணவர்களைத் தேடிச் சென்றார்
அவர்களே நம் வருங்காலம் என்றார்
இந்திய நதிகளை இணைக்க வேண்டும்
இந்தியா வல்லரசாக வேண்டும்
என்கிற அவரது கனவு நனவாக
நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்
நல்வழியில் செயல்பட வேண்டும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.