கலாமுக்கு இறுதி சலாம்

கலாமுக்கு இறுதிசலாம் நாமே சொல்வோம்!
கலாம்வழியில் சென்றேநாம் உலகை வெல்வோம்!
நிலாவொத்த நன்நடையால் சுழன்றார் நாட்டில்!
நிஜமனதில் குழந்தையானார்! பெருகும் அன்பால்
உலாவந்த மாணவரை எழுச்சி மிக்க
உரையாலே தாழ்சியின்றி தன்பால் ஈர்த்தார்!
துலாக்கோல்போல் துணிவுடனே ஆட்சி செய்தார்!
துன்பத்தில் உழன்றோர்க்கு விடியல் தந்தார்!
மாளிகையில் இருந்தாலும் எளிய வாழ்க்கை!
மனிதநேயம் ஒளிர்கின்ற தன்னம் பிக்கை!
களிகூர்ந்து வருவோரை மதித்துப் போற்றி
கருணையாலே பலபணிகள் முடித்து வைத்தார்!
வளிசூழா விண்வெளியில் புரட்சி செய்தார்
வான்பார்த்து கற்போர்க்கும் வழியாய் நின்றார்!
குளிர்மண்ணில் குடிகொண்டார் தலைவர் என்று
குடிமக்கள் குமுறுகின்றார் கண்ணீர் சிந்தி !
உறங்கவிடா கனவுகளால் எழுச்சி பொங்க
உலகமெங்கும் நம்தமிழின் பெருமை ஓங்க
மறத்தமிழன் வள்ளுவனின் வழியில் நின்று
மன்றமெங்கும் அவர்கருத்தை மொழிந்தார் நன்று!
முறசரைந்து ஐநாமன்றில் “யாதும் ஊரே
யாவரும் கேளீர்” ரென்றே விளக்கம் தந்தார்!
உறங்குமணு ஆற்றலையே அணுகுண் டாக்கி
உயர்த்தெழும் ஏவுகணையை உயர்த்தி வைத்தார்!
கலாம்நனவை நம்நெஞ்சில் நிறுத்தி, அன்று
கனவுகண்ட இந்தியாவை கண்முன் காண்போம்!
நலமுடன்நாம் வாழஅவர் வகுத்தார் திட்டம்
நாமதனை நிறைவேற்ற இந்தியாவே
நிலமதிலே வல்லரசு நாடே யாகும்!
நிறைமனதால் உறுதிசொல்வோம்! இணைந்து நாமே
கலாமுக்கு இறுதிசலாம் சொல்வோம்! சொல்வோம்!!
கலாம்வழியில் சென்றேநாம் உலகை வெல்வோம்!!!
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.