நீர்மேல் எழுத்து!
மேடையில் முழங்கிடும்
மேன்மை தரும் சொற்கள்தான்
பாசாங்கு கூட்டத்தினர்
பாதத்தில் மிதிபடும் கற்கள்தான்!
நாவில் உதிர்த்த வார்த்தையது
நாடகம் என்றே ஆகியது
மேடை விட்டு இறங்கியதுமே
மேயும் புசுத்தோல் புலியென்றாகியது!
எட்டடி நடக்குமுன்னே
எடுத்துரைத்த சொற்கள் ஓடிடுதே
எழுத்தால் நீர்மேல்
எழுதிடும் கோலமென ஆகிடுதே!
நின்றால் ஒரு பேச்சு
நடந்தால் மறு வீச்சு
நிறுத்து அளக்கும் மூச்சு
நித்திரை விழுங்குவதாய் ஆச்சு!
நம்பினார் கெடுவதில்லை
நான்குமறைத் தீர்ப்பெல்லாம்
நம்பியவரைக் கழுத்தறுக்கும்
நயவஞ்சகர்க்கு வெறும் சொல்லாம்!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.