அன்பின் வழியினிலே...!

ஒன்றாய் உலகில் பிறந்தோமே! நம்
அன்னை கொஞ்ச மகிழ்ந்தோமே!
கல்வியை நாடிப் பெற்றோமே! நன்கு
நாட்டு நடப்பை அறிந்தோமே! நாளும்
செல்வம் தேடி அலைந்தோமே!
செல்வம் நன்கு சேர்ந்தவுடன்
தீமை பலவும் செய்தோமே!
மனமோ என்றும் தெளிவின்றி
மயங்கி மருண்டுஓடியதே!
ஆடி அடங்கும் வாழ்க்கையில் நாம்
அறிந்து வைத்த செய்தியென்ன?
அகிலம் வளரும் அன்பாலே
அருளும் வளரும் அன்பாலே
அன்பே கடவுள் என்பதையே
அனைவரும் நன்கு உணர்வோமே
அன்பால் அனைவரும் ஒன்றிணைந்தால்
அகிலம் மகிழ்ச்சியில் தழைத்தோங்கும்
அன்பு என்ற அமிழ்தத்தை
அன்னை ஊட்ட அறிகின்றோம்!
அன்பை அறியும் முன்னாலே
அதனுள் மூழ்கிப் போகின்றோம்!
தன்னுள் புகுந்த உயிருள்ளே
தானும் கலந்து தங்குவதால்
மின்னும் இந்தப் பூமியிலே
மீளாச் சிறைதான் அன்பன்றோ!
அன்பே அறிவைப் பெருக்கிவிடும்
அன்பே வம்பைத் தொலைத்துவிடும்
அன்பே கலைகளை வளர்த்துவிடும்
அன்பே அகத்தில் ஒளியூட்டும்
அன்பே பண்பை வளர்த்தெடுக்கும்
அன்பே அனைத்தையும் ஈந்துவிடும்
அன்பு அறிவில் இருந்துவிட்டால்
ஆன்ம ஆற்றல் கிடைத்துவிடும்!
அன்பு மனத்தில் இருந்துவிட்டால்
ஆழ்ந்த கருணை பிறந்துவிடும்!
அன்பு உணர்வில் இருந்துவிட்டால்
ஆசைக் காதல் பிறந்துவிடும்!
அன்பு செயலில் இருந்துவிட்டால்
அகிம்சை ஞானம் பிறந்துவிடும்!
அன்பே துன்பத்தைப் போக்கிவிடும்
அருளை வாரி வழங்கிடுமே!
அன்னை போன்ற அன்பாலே
அனைவரின் துன்பம் போய்விடுமே
அன்பே என்றும் துன்பத்தை
அடியோடு அழிக்கும் மருந்தாகும்
அன்பால் பிரியும் உள்ளங்களின்
அன்பின் பிணைப்பை எந்நாளும்
அரும்பும் கண்ணீர் காட்டிவிடும்
அன்பின் எல்லை இதுவன்றோ!
அகிலம் இதற்கு தூசியன்றோ!
அன்பை அடைக்கும் தாழில்லை
அன்பால் யாருக்கும் தாழ்வில்லை
என்பைக் கூட அனைவருக்கும்
எளிதாய்க் கொடுப்பது அன்பன்றோ?
பாலைவனத்தில் புழுப்போன்று
அன்பில்லாரும் துன்புறுவர்
அன்பே அனைத்தையும் வாழ வைக்கும்
அருமருந்தாகும் உலகத்தில்
ஆணவம் கொண்ட மனிதரெல்லாம்
அனைத்தையும் தாமே வைத்துக் கொள்வார்
அகத்தில் அன்பை வைத்தவரோ
அனைத்தையும் பிறருக்கு ஈந்திடுவர்
வீரமில்லாக் கோழையர் மேல்
சீராய் ஒருவர் அன்பு வைத்தால்
வீர தீரச் செயல்செய்து
வியக்கும் வெற்றி பெறுவாரே!
தன்னலம் என்றும் போற்றாத
அன்புடையோர் உலகில் உயர்ந்தவராம்
கோழைக்கும் வீரத்தைக் கொடுக்கின்ற
கடவுளாம் அன்பின் வழியினிலே
நடந்து நலமாய் வாழ்ந்திடுவோம்
நாளும் நலமும் பெற்றுய்வோம்...!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.