ஆசைதான்! ஆனால்...?

கடலே...! கடல் அலையே...!
நீ எத்தனை அழகாக இருக்கிறாய்...!
உன் அழகிலும் ஒரு கோர
முகம் மறைந்து கிடக்கின்றது...!
உன்னைப் பார்த்துக் கொண்டு
உன் பரந்த உடற்பரப்பை
ரசிக்க எனக்கு ஆசைதான்...!
உன் அலைக்கரங்களோடு
என் கரங்களையும் பிணைத்து
உன் மடியில் தவழ்ந்து
விளையாட ஆசைதான்...!
உன்னைச் சுண்டுவிரல் கொண்டு
தொட்டுப் பார்க்க ஆசைதான்...!
எனது முழங்கால் தொடும் நீரில்
மூழ்கி எழ ஆசைதான்...!
எனது கால்களை நனைத்தபடி
வேர்க்கடலையைக் கொரிக்க ஆசைதான்...!
உன்னுள் நீண்ட தூரம் சென்று
நீந்திவர ஆசைதான்...!
எனது நண்பர்களுடன்
கூட்டமாகச் சேர்ந்து
உன் அலைக்கரங்களில்
பந்தினை எறிந்து
விளையாடவும் ஆசைதான்...!
பொங்கி வரும் அலைநுரையை
கைகளில் அள்ளி
விளையாட ஆசைதான்...!
இருந்தாலும் எனக்கு ஏனோ
மனம் வரவில்லை...!
எப்போது நீ
எங்கள் வீட்டிற்குள் புகுந்தாயோ
அன்றிலிருந்து உன்னைத்
தொட்டுப் பார்க்க அல்ல
தூரத்தே நின்று பார்க்கவும் கூட
நினைப்பதற்கும் கூட
அச்சப்படுகிறோம்...!
ஆண்டுதோறும் நாங்கள்
எங்கள் சாமிகளை
தீர்த்தமாட உன்னிடத்தில்
கொண்டு வருகிறோம்...
நீ எப்பொழுது
எங்கள்வீட்டுச் சாமிகளை
எங்களிடமிருந்து பறித்துக்
கொண்டு போனாயோ...
அன்றிலிருந்து உன்னைத்
தொட்டுப் பார்க்க அல்ல
தூரத்தே நின்று பார்க்கவும் அச்சம்...
நீ வந்து போய்
ஆண்டு பல ஆனாலும்
நீ தந்த காயத்தின் வடு
இன்னும் ஆறாத ரணமாக
இருந்து கொண்டேதான் இருக்கிறது...!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.