மனிதனே தெய்வம்!
மனிதநேயம் ஒன்றைத்தான் உலகம் வாழ்த்தும்
மற்றவழி எல்லாமும் நம்மை வீழ்த்தும்
இனிமையுடன் மக்களெல்லாம் உலகில் வாழ
இதயத்தை குறிவைப்போம் அன்பால் வீழ்த்த
தனியொருவன் வாழ்வதற்கும் உதவி செய்வோம்!
தவிக்கின்ற பலபேர்கள் இருக்கும் நாட்டில்
இனிநாமே கைகோர்த்து சேவை செய்வோம்
இந்தியாவின் ஒற்றுமையைக் கூடிக் காப்போம்!
இருக்கின்ற பொழுதெல்லாம் இரத்த தானம்
இறக்கின்ற நொடிதனிலே கண்கள் தானம்
தருபவராய் இருப்பதிலே மகிழ்ச்சி பொங்கும்!
தாக்கார்க்கு ஈவதிலே இன்பம் தங்கும்!
வருமானம் முழுவதையும் பிறருக்காக
வகுத்தளித்து வாழ்பவரும் நம்மில் உண்டு
கருணையாலே இம்மண்ணில் தனது வாழ்வை
கடுநோயற்கே அற்பனித்தார் தெரேசா அன்னை!
மனிதருணர்வைப் போற்றி வாழும் மாந்தர்
மனிதரிலே புனிதராவார்! எளிமை கொண்ட
வானிலொரு விடிவெள்ளி நமது கலாம்
வாழ்வோர்க்கு அடையாளம் அவரே என்போம்!
நானிலத்தில் நாமிருக்கும் நாட்கள் எல்லாம்
நலிந்தோர்க்கு அன்புதன்னை பகிர்ந்தளித்து
மனிதனேகண் கண்டதெய்வ மென்று நாமும்
இனியதொரு விதிசெய்து வாழ்வோம்! வாழ்வோம்!!
- சி. அருள் ஜோசப் ராஜ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.