யாகம்...!
பின் தொடரும் வெயிலை
குடைபிடிக்கும் மரங்களை
பறவைகள் கூவும் தோப்புகளை
நிலவு தழுவும் வானத்தை
விட்டுவிட்டு
தென்றலுக்குக் கதவடைத்து
அடுப்பில் நிற்கிறேன்.
வயல் பொந்துகளில்
ஞெகிழிப் பைகளைச் சேர்க்கும்
எலிபோல
மண்விற்ற காசில்
அலைபேசியும் சுவரில் மாட்டும்
தொலைக்காட்சியும் வாங்கிவிட்டேன்.
மண்ணொட்டாத வாழ்வே
மதிக்கப்படும் நாட்டில்
“அசிங்கமாக”
மண்ணில் புதையும் வேர்களை
யாகசாலையில் இட்டு
மழைநீர் வேண்டி
மட்டைப் பந்தாட்டம் பார்க்கிறேன்...!
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.