கனவிலும் உன் நினைவுகள்!

எப்போதும் ஓயாத
காற்றலையில் தவழும்
உன் நினைவுகள்
என் மனதின் -
சுவாச அலையாய்...
உன் நினைவுகளோடு
கை கோர்த்துக் கொள்கிறேன்...
உந்தன் நினைவுகள்
என் உயிரில் கலந்தது -
என்றென்ணி இருந்தேன்;
இல்லை -
உன் நினைவே
உயிராக என்னுள்...
இரவில் கனவொன்று கண்டு
கண் விழிக்கும்
தருணம் - உன்
நினைவுகள்
தாலாட்டும் !
அதிகாலைப் பொழுது
துயில் எழுப்பும் முன் -
உன் நினைவுகள் எழுப்பும்
என்னை!
என் அசைவிலும் காண்கிறேன்
உன்னை...!!
காணும் காட்சி எங்கும் நீ...
பேசும் வார்த்தையிலும் நீ...
எல்லாமும் நீயாய்!
இருள் படரும் இரவில்
என் விழிக்குள் பகலாய் -
உன் நினைவுகள் குடியேறும்!
தடுமாறும் என்னில்
ஏதேதோ குழப்பம்;
உன் நினைவு மட்டும்
நிலையாய் என்னில்!
எவர் தடுத்தாலும்
யார் மறுத்தாலும்
நீ என் உறவென்று -
உன் நினைவுகள் சுமந்த
கனவொடு வாழ்கிறேன்!
கண்ணீரில் சர்க்கரைத் துளியாய்...
பாறையில் பனித்துளியாய்...
பூவின் தேன் துளியாய்...
படிந்திருக்கும் நினைவுகள் -
சிப்பிக்குள் முத்தாய் என்னுள்!
உன் வாய்மொழி கேளாத
என் செவிக்கு -
இதயத் துடிப்பின் ஓசை கூட
இரணமாகிறது;
சங்கீதமும் சத்தமாகிறது...
எனைக் கொஞ்சும் மொழியும்
சிமிட்டும் விழியும் காண -
ஏக்கம்...
வாட்டுகிறது என்னை!
பாசத்துள் இடைவெளி
வைக்க விரும்பவில்லை;
இ... டை... வெ... ளி...
என் மனதுள் -
உனை இல்லாது செய்து விட்டால்?
கவிதையால் தழுவுகிறேன் உன்னை!
எனக்கு மட்டும் சொந்தம் நீ !
எனக்கு மட்டும் சொர்க்கம் உன் உறவு;
உனைப் பற்றிய புலம்பல்கள்
எனக்கும் மட்டும் சொந்தம்;
என்றும் எப்பொழுதும்!
உன் மனதில் வேறொருவர்
குடியேற அனுமதிக்கவில்லை
நான்...
உனை நினைத்து ஏங்கும் என் விழிகள்
உனை மட்டும் தேடும்;
மறுமுறை -
உனை காணும் வரை...
உன் நினைவென்னும்
கனவு மட்டும் காணும்!
ஒத்த வழிப் பாதையிலே
தனியே செல்லும் -
என் விழிக்கு ஒளியாய்...
உன் நினைவு மட்டும் போதும்!
கதிரவன் கதிராய் கரம் கோர்க்க...
காற்று தென்றலாய் தேகம் தீண்ட...
மழை ஈர இதழாய் உச்சி நுகர...
என்றும் என்னுடன் நீ...!
நம் எச்சங்களில்
சுவாசிக்கும் - நான்
அதிகாலைப் பொழுதும்
அந்திமாலைப் பொழுதும்
ஏங்குகிறேன்... !!
உன் முகம் காண...!!!
- பா. இரேவதி, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.