இரு துருவம்
ஓடி ஓடி உழைத்தே தினம்
ஓடாய்த் தேய்ந்து போனானே பாட்டாளி...
பெருத்த உடலது இளைக்கத்தானே
ஓட்டமாக ஓடுகிறார் பகட்டாளி...
மாடிவீடு கட்டிய உழைப்பாளி வாழவோர்
மண்ணு வீடும் இல்லையே...
மாடி வீடு பலவும் கட்டிப் போதாத பகட்டாளி
காலிமனை இன்னும் தேடி அலைகின்றார்...
உண்பதற்கு உணவின்றி தவிக்கின்றான்
பல வேளைகளில் பாட்டாளி...
தின்பதற்கு ஆளின்றி வீணடிக்கின்றார்
பல வழிகளில் பகட்டாளி...
கந்தை ஆடையும் மாற்றுக்கின்றி
பாட்டாளி வாழ்வுதினம் கழியுது...
தினமொரு புது உடுப்பென்றே
பகட்டாளி வாழ்வுதினம் கொழிக்குது...
விளக்கேற்ற எண்ணெய் இன்றி
பாட்டாளி வர்க்கம் தவிக்குது...
வெடி போட்டுக் கொண்டாடியே
பகட்டாளி கூட்டம் காசைக் கரியாக்குது...
பிறருக்காக உழைத்து உழைத்தே
பாட்டாளி தெருவில் தவிக்கிறான்...
பிறர் உழைப்பைச் சுரண்டி காசுசேர்த்த
பகட்டாளி ஏளனமாய்த் தாக்குகிறார்...
பாதி வயிறும் நிறையாமல்
பாட்டாளி இங்கே உழைக்கிறான்
தொந்தி வயிறு பகட்டுக்காரர்
பாட்டாளி உழைப்பைச் சுரண்டுகிறார்...!
சேராத இரு துருவமாய்
பாட்டாளி பகட்டாளி
சேரும் கரை சேர்க்கும் என்றேனும்
பட்டறிவும் படிப்பறிவும்!!
- விஜயகுமார் வேல்முருகன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.