எப்படித்தான் வாழறது...?

என்ன வாழ்க்கையிது
எப்படித்தான் வாழறது...?
ஏரோப்பிளேன்போல
ஏறுதிங்கே விலைவாசி
எதையும் எப்போதும்
எங்கேயும் வாங்க வழியில்ல...
என்ன வாழ்க்கையிது
எப்படித்தான் வாழறது...?
வேலைசெஞ்சி பிழைப்போமின்னா
வேலைக்கேத்த கூலியில்ல...
வேகாத வெயிலுல
வெம்பரந்த பொட்டலில
வேலை செஞ்சு வந்தாலும்
வெலவாசி ஏற்றத்தால
வாய்க்கு ருசியாக
வாங்கிச் சாப்புட முடியலியே!
என்ன வாழ்க்கையிது
எப்படித்தான் வாழறது...?
சத்து கெட்ட சாப்பாடு
ஒத்துக்கிட மாட்டேங்குது
ஒடம்பு கெட்டுப் போயிடுச்சு
ஆசுப்பத்திரி போனமின்னா
ஆர்லிக்சு காம்ப்ளான்னு
சத்தான சாப்பாட்ட
முத்தாகச் சாப்பிடுன்னு
மொத்தமாச் சொல்றாரு
மெத்தப் படிச்ச டாக்டரு...!
என்னத்தச் சொன்னாலும்
என்னத்தச் செய்தாலும்
என்னோட வருவாயில
எதையும் வாங்க முடிவதில்லே...!
எல்லாத்தையும் பாத்துப் பாத்து
ஏங்கத்தான் முடியுதிங்கே...!
என்ன வாழ்க்கையிது
எப்படித்தான் வாழறது...?
செய்யிற வேலையும்
தினந்தோறும் கிடைப்பதில்லை...!
வேலை கெடச்சாலும்
தொடர்ந்து கெடக்கலியே...!
வருவாய்க்கும் வழியில்லே
பிள்ளைக்குட்டி பொண்டாட்டிக்கும்
பசியைப் போக்க முடியலயே...?
நல்ல சோறு சாப்பிட்டு
நாளு ரொம்ப நாளாச்சு...
நாலு பேரப் போல நாம
நல்லா வாழுறது எந்தக் காலம்...?
என்ன வாழ்க்கையிது
எப்படித்தான் வாழறது...?
விவசாயம் செய்யலாம்னா
மழையும் சரியாப் பெய்யவில்லை
விவசாயமும் செய்யவில்லை...
எனக்கு வேறவேலை தெரியலை
பொழைப்புக்கான வழியைத் தேடி
போறதெங்கே புரியலையே...!
மெஷின்கள் பல வந்ததால
மனுசனுக்கு வேலையில்லை...!
மெஷினு வேலை செய்வதால
ஆலைகளுக்குக் கொண்டாட்டம்
மனுசன்பாடு திண்டாட்டம்...
பலபல கம்பெனிகள்
படையெடுத்து வருது இங்க...
படையெடுத்து வந்தாலும்
பகலிரவு உழைப்புக்குனு
பணிக்கு ஆளை எடுக்கலை...!
பணம்காசு உள்ளவங்க
பதுக்கிப் பதுக்கி வைக்கிறாங்க
பஞ்சப் பராரி எல்லாம்
பட்டினியால் சாகுறாங்க...!
எங்க வாழக்கை எல்லாம்
எப்படியோ போகுதுங்க...!
லஞ்சப் பணத்திலேதான்
லாவகமா வாழுறாங்க
கொஞ்சங்கூட வெக்கமின்றி
லஞ்சத்தையே கேக்குறாங்க
வழிப்பறிக்காரனுக்கும்
லஞ்சக்காரனுக்கும்
வித்தியாசம் ஏதுங்க...!
லச்சை இல்லா ஒரு கூட்டம்
லஞ்சங் கொடுக்க அலையிதுங்க...!
லஞ்சங் கொடுத்து வாங்கிவிட்டு
அதை நாயப்படுத்திப் பேசுறாங்க...
வெள்ளவேட்டி சட்டையில
வேலைக்குத்தான் வந்தவங்க
வேலையத்தான் செய்யாம
சொந்த வேலை பாக்குறாங்க...
வேலை செய்யச் சொன்னாக்க
சாதி பெயரச் சொல்லிச் சொல்லிச்
சதிவேலை செய்வாங்க...
சொந்த வேலையத் தவிர
மத்த வேலை பாக்காம
சொகுசாத் திரியறாங்க...
சொரண கெட்ட மனுசனுங்க...
அரசு வேலை அரசு வேலைன்னு
அசராம அலைஞ்ச கூட்டம்
அரசு வேலை கெடச்ச பின்னால
அந்த வேலை செய்யாமா
சொந்த வேலை செய்யிறாங்க...
நேர்மையா இருந்தாக்க
நெட்டித் தள்ளி விடறாங்க...
பொழைக்கத் தெரியாதவன்னு
முத்திரை வேற குத்துறாங்க...!
என்ன வாழ்க்கையிது...?
எப்படித்தான் வாழறது...?
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.