புயலாய்...!
விளை நிலங்கள் முக்கால்வாசி
வீடுகளாகிப் போக
கால்வாசி நிலங்களில்
கால் வயிற்றுக் கஞ்சிக்கேனும்
வயலை உழுது
பயிர் விளைக்க
உழும் காளைகள்
அடிமாடுகளாய்ப் போய்விட்ட அவலம்...
குடும்ப வண்டி ஓட
கலப்பை வண்டி இழுக்கும்
மாடாகும் அடிமைப் பெண்கள்
நாட்டின் கண்கள் என்று
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவோர்...
மலிவாகிப் போன மனிதர்
உலகை எட்டிப் பார்ப்பதே
எட்டிக்காய் கசப்பென
வானம் மழை எச்சிலைத்
துப்பாமல் விழுங்குது பலநேரம்!
சில நேரம் ஆத்திரத்தில்
'தூ' வென துப்பிப் பொங்குது புயலாய்...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.