எதைக் கொண்டு எதை மூட...?

எல்லாம் நடந்தது
எப்படியோ நடந்தது
ஏதேதோ நடந்தது
என்னெல்லாமோ நடந்தது
அத்தனை செயல்களும்
அடாவடியானதென்று
அங்கிருந்து வந்தவங்க
உள்ளதச் சொன்னாங்க...
உருப்படியா எல்லாத்தையும்
உளவறிஞ்சு போனாங்க
உண்மைன்னு சொன்னாங்க...
உண்மை வென்றதுன்னு இங்க
உள்ளவங்க நெனச்சாங்க...
அவங்க நெனச்சதுல தப்புல்ல
நெனப்பே சொகமாருக்கு
நெஞ்சம் நெக்குருகிப் போயிடுச்சு...
தப்புக்குத் தண்டனைதான்
உறுதிப் படப்போகுதுண்ணு
எல்லாரும் நியாயத்தை
எதிர்பார்த்து நின்னாங்க...
ஆனா நடந்ததெல்லாம் நாடகந்தான்...
எல்லாரும் நல்லாவே நடிச்சாங்க...
நடிகர்திலகமானாங்க...
நடந்தது அனைத்தும்
நல்லா அறிஞ்சிருந்தும்
அதை அமுக்கிடவே நினச்சாங்க...
அதுல வெற்றியும் பெற்றாங்க...
வெற்றியக் கொண்டாடவும் செஞ்சாங்க...
எதைக் கொண்டு எதை மூடுனாங்க...
எல்லாருக்கும் புரியவில்லை...
அவங்க கண்ணு
புண்ணாகிப் போச்சுதுங்க...
நியாயத்தைக் கேட்டவங்க
நிலைகொலஞ்சு போனாங்க...
ஏன்னா எல்லா நாயத்தையும்
எதுவோ மூடிடுச்சு...
எல்லாம் எக்குத்தப்பாப் போயிடுச்சு...
நியாயம் கெடைப்பதுக்கு
எதைக் கொண்டு எதை மூட...?
அதைக் கொண்டு அதை மூடி
கதைய நல்லா நடத்துறாங்க...
எல்லாம் நடந்தது உண்மைதான்
அவையெல்லாம் நன்றாகவே நடந்தது...
ஆனாலும் இங்க குற்றவாளி சுத்தவாளி...
யாராக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது
எல்லாம் நன்கு நடப்பதற்கு
எதைக் கொண்டு எதைமூட
ஒண்ணும் புரியவில்லை...
ஒலக நடப்பு அறியவில்லை
ஒண்ணுமே நடக்காதது போல
கண்ண மூடிக் கொள்ளுங்க...
காரியங்கள் நடக்குமுங்க...
கண்ணத் தொறந்தாக்க
காரியங்கெட்டுப் போகுமுங்க...
கண்ண மூடுதற்கு கவனிப்பு இருக்குதுங்க...
ஒங்க கவலையெல்லாம் தீருமுங்க...
எல்லாத்தையும் செய்யுங்க...
எப்படியும் செய்யுங்க...
எல்லாம் நடக்குமுங்க...
ஆனா எதையும் அதைக் கொண்டு மூடலாங்க...
எதுவும் புரியவில்லை...
புரிஞ்சது எல்லாத்தையும்
புரிஞ்சதாக் காட்டாதீங்க...
புரியாமப் பண்ணுவாங்க
ஒங்களப் புரிஞ்சிக்கிட மாட்டாங்க...
புரிஞ்சது எல்லாமே அதைவச்சு மூடுவாங்க...
அப்போது புரிஞ்சிடுங்க... ஆனா
மனச்சான்றை எதைவச்சு மூடப்போறம்...?
இயற்கையின்னு சொல்லுவாங்க...
இறைவன்னு சொல்லுவாங்க
மனசாட்சிய எல்லாத்தையும்
எதைவச்சு மூடப்போறம்...?
எதைக் கொண்டு எதை மூட...?
அதைக் கொண்டு அதை மூடு...?
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.