தன்னைப் போலவே...!

நெஞ்சில் என்றும் வஞ்சம் வைப்போர்
அமைதியை இழக்கின்றார்
அமைதியை இழந்து அன்பையும் இழந்து
தெருவில் திரிகின்றார்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
மறைத்தே வாழ்கின்றார்
அவர் உள்ளத்தில் உறையும் பகையே என்றும்
உயிரை மாய்த்துவிடும்
தினம் வம்பை வளர்க்கும் மாந்தர் மனதில்
அன்பே இல்லையடா
அன்பே இல்லா மனங்களில் எல்லாம்
அரக்கன் வாழுகின்றான்
கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றே
அன்பை வளர்த்துவிடும்
அன்பை வளர்க்கும் வழிகளை உணர்ந்து
அனைவரும் பயணித்தால்
அகிலம் எங்கும் அமைதி தவழும்
சோலைகளாகும் அன்றோ?
கள்ளம் உடைய குள்ள மனிதர்
உள்ளம் தெளிய வேண்டும்
உண்மை உழைப்பு ஒன்றே மக்கள்
வாழ்க்கையை உயர்த்திவிடும்
உயரே பறக்கும் பறவைகள் எல்லாம்
வஞ்சம் வைப்பதில்லை
நல்லதைத் தடுக்கும் அற்பர்கள் என்றும்
சிறக்க வாழ்ந்ததில்லை
பிறரை மதித்து உழைப்பைக் கொடுத்து
உலகை உயர்த்திடுவோம்
உலகில் கடமையைச் செவ்வனே செய்து
செம்மையாய் வாழ்ந்திடுவோம்
தன்னலம் போற்றி தருக்கியே திரிந்து
பிறர் நலம் அழிக்காதீர்
தன்னலம் மாய்ந்தால் பொதுநலம் மலரும்
பூமியும் செழித்துவிடும்...!
பிறருக்கு நீரே தீங்கே செய்தால்
உம்மைத் தீவினை மாய்த்துவிடும்
தன்னைப் போலப் பிறரையும் எண்ணி
தரணியில் வாழ்ந்திடுவீர்...!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.