ஆனந்தத் தீபாவளியாக...!
தீபாவளி விழாப் பொழுது
சந்தோஷவாசிகளே நில்லுங்கள்
உங்களின்
புலன்களை நிறைத்தது எவை...?
வழி வழியாக வந்த வழக்கமென
தலையில் உடம்பெல்லாம்
எண்ணைய்யைத் தேய்த்திருந்து - பின்
குளித்துச் சிலிர்ப்பீரே அதிலா...?
இருமாதம் சொச்சம் - பல
ரகங்களில் ஆடைக் கற்பனையில்
ஏதோவொன்றை எடுத்து வந்து
அணிந்து மினுக்குவீரே அதிலா...?
நேற்று வரை உண்ணாதிருந்த மாதிரி
இட்லியும் வடையும்
இறச்சியையும்
ஆவலாய்த் தின்று ருசிப்பீரே அதிலா...?
திரியில் கங்கு வைத்துக் காத்திருந்து
பட்டாசு வெடிக்கவும்
எதிரியை துவம்சம் பண்ணிவிட்டதாய்
எண்ணிக் கர்வத்திலிருப்பீரே அதிலா...?
சின்ன சின்ன மின்னல்களென
கண்களுக்கு ரசிப்பாயிருந்து - தன்
புத்தாடை கரிப்பொத்தலானாலும்
சுருங்காத முகத்துடன் சிரித்தபடியே
மத்தாப்பூ சுற்றுவீரே அதிலா...?
நகராசுரன் நல்லவனா? கெட்டவனா?
தொலைக்காட்சி நகைச்சுவை விவாதத்தில்
குடும்பத்தோடு நெருக்கமாயிருந்து
கைதட்டி குதூகலிப்பீரே அதிலா...?
ஆமாம் என்றே பதில் சொல்பவர்களே
நீங்கள்... சற்றே சிந்தியுங்கள்...
எண்ணெயில்லாக் காய்ந்த தலையோடு
உடம்பு மறைக்கும் ஏதோ உடையோடு
உயிர்தாங்க ருசியறியாது சாப்பிட்டு
இருளே வாழ்வாகி இருக்கும்
சிலருக்காவது உங்கள்
உணவு, உடைகளை
உதவி செய்து பாருங்கள்...
அவர்களின் மகிழ்ச்சியில்
உங்களின் மகிழ்ச்சியும் சேர்ந்து
கொண்டாடும் தீபாவளி
ஆனந்தத் தீபாவளியாக...மாறட்டும்!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.