நான் மாறிட்டேன்...

என்னத்த சொல்லுவே(ன்)
ஏதுன்னுதான் சொல்லுவே(ன்)
நல்லாதான் நானிருந்தேன்
நாலுதட்டு சோறுதிம்பேன்
உன்னப் பார்த்த பின்னாலே
ஒன்னும் செய்ய தோனலையே
கண்ணமூடி சிரிச்சேதான் ஏ(என்)
நெஞ்ச திறந்து நொழைஞ்ச புள்ள...
வரப்புமேட்டு மேல நீயும்
வந்து வந்துப் போகும்போது உன்
வாசம் நின்னுப் போகுதே
வம்பா எம்மனச இழுக்குதே
வரப்புமேல நடக்குறேனு
வயலுமேல நடக்குறேன்...
வண்டிமாடு இல்லாம
வண்டியோட்டிப் போகுறேன்...
தட்டுலதான் சோறிருக்க
தரைய நானும் தடவுரேன்...
தாழ்வாரத்து நெலமறந்து
தலையைக் கொண்டு மோதுறேன்...
பரட்டத் தலையா கெடந்தவன
படிஞ்சத் தலையா மாத்துனேன்...
எதுக்க நீயும் நின்னபோதும்
எனக்குள்ள நானே பேசுறேன்...
சீனிக்கரும்ப சிரிச்சி சிரிச்சி
நீயும் கடிக்கும்போது
செதிலு செதிலா சிதறுறேன்...
சிக்குவிழுந்த முடிக்குள்ள சிக்கிகிட்ட
சீப்பப்போல உங்கிட்டதான் சிக்கினேன்...
சீயக்காயா நெனச்சுக்கிட்டு
மொளகாயத் தேய்ச்சுட்டேன்...
மனசுக்குள்ள உன்ன நெனைக்க
மொளகாயும் சில்லுங்குதே...
மழப்பெஞ்சி வர மண்ணுவாசம் போல
மனசுக்குள்ள நீயும் புதைஞ்சிபுட்ட
மந்தையிலே போகும் ஆட்டைப் போல நானும்
மயங்கி தினம் உன் பின்னால
வந்து நிக்கிறேன்...
புத்தியும் கெட்டுப் போயி
பையித்தியமா நா (நான்) ஆறதுக்குள்ள
பக்கம் வந்து நின்னா என்ன...
பாக்கு வெத்தலை மாத்தனுமோ...
வெதச்ச நெல்லும் நல்லா வெளஞ்சிருக்கு
பச்சபசேலுனு பூமியும் நெறஞ்சிருக்கு
அறுவடதான் முடியட்டும்
ஆயிஅப்பன கூட்டிவந்து
பரிசம் நானும் போடுறேன்...!
- விஜயகுமார் வேல்முருகன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.