சரித்திர நாயகன் சிவாஜி கணேசன்
வரலாற்று நாயகரை நிறுத்தி நெஞ்சில்
வருகின்ற கற்பனையால் அசைவு தந்து
வீரஉணர்வால் தலைசாய்த்து உயர்த்தி கண்கள்
வீச்சுதமிழ்ச் சொல்லெடுத்து வசனம் பேசி
கரமுயர்த்தி காலசைத்து எழுச்சி பொங்க
கணேசன் நீ மேடையிலே நடந்து வந்தால்
கரம்தட்டி மகிழாத மக்கள் உண்டோ?
கற்பனைக்கும் உயிர்தந்த கலைஞன் அன்றோ!
தமிழ்பேசும் உன்னழகை ரசித்த பல்லோர்
தனித்தமிழ் பேச்சாலே உயர்ந்தே நின்றார்!
தமிழகத்துப் பாலரெல்லாம் வசனம் பேசி
தன்திறனைக் காட்டுதற்கே உந்திறனை
சேமித்தார்! வரலாறு படைத்த சோழர்
சேரர்நற் பாண்டியரை அறிய வைத்தாய்!
பூமியிலே திருஉருவைத் தானே தாங்கி
பூவுலகப் பரமனுமாய்க் காட்சி தந்தாய்!
நடிக்காத வேடங்கள் இல்லை! உந்தன்
நடிப்பிற்கும் உண்டிங்கோ எல்லை! நீயும்
படிக்காத மேதையானாய்! ஆய்ந்து பார்ப்பின்
படித்தோர்க்கும் பாடமானாய்! உலக மக்கள்
நடிப்போ பொய்! மெய்யான நடிப்பால் என்றும்
நம்மவர்க்கு இமயமானாய் நெஞ்சில்! இன்றும்
துடிப்பான உன்நடிப்பால் மகிழ்ச்சி பொங்க
துணிவோடு வாழ்கின்றார் முதியோர் நன்றாய்!
- சி. அருள் ஜோசப் ராஜ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.