செயல்வீரர் காமராசர்
செயல்வீரர் காமராசர் செய்த தொண்டு
செழுந்தீயாய் தமிழர் நெஞ்சில் உண்டு
செயற்கரியச் செயல்செய்த அவரைக் கண்டு
செங்கதிரும் வியப்புடனே பார்த்ததுண்டு
உயரணைகள் அமைத்தே புனல் மின்சாரம்
உத்தமரே பெறுவதற்கு வழிகள் செய்தார்
முயற்சியாலே நாடெங்கும் அமைத்தார் சாலை
முடியாத பலசெயலை முடித்த வேளை
ஞாலமதில் தமிழனுமே உயர்ந்து நிற்க
ஞானஒளி வழிசெய்தார் அவனும் கற்க
பாலரெல்லாம் பயிலுதற்கே சிற்றூர் தோறும்
பள்ளிகளைத் திறந்தேபகல் உணவும் தந்தார்
காலமெல்லாம் மக்களுக்குச் சேவை செய்ய
கருத்தாகத் தேவைகளை அறிந்தார் மெல்ல
சாலச்சிறந்த திட்டங்கள் வகுத்தார் செம்மல்
சாந்தமூர்த்தி காந்திபோல வாழ்ந்தார் வள்ளல்
துளிச்செல்வம் வீணாக விடவே மாட்டார்
துணிந்தேதன் அனுபவத்தை எடுத்துரைப்பார்
விளித்தழைத்து பொறுப்புகளை ஏற்கச் செய்தார்
விஞ்ஞானம் மெய்ஞானம் அறிந்தே சொன்னார்
வளியவரும் விளம்பரங்கள் வேண்டாம் என்றார்
எளியவராய் தமிழகத்தில் வாழ்ந்தே சென்றார்
களிப்புடனே அவர்பேச்சைக் கேட்டார் மக்கள்
கர்மவீரர் அவரென்றே வணங்கி நின்றார்
- சி. அருள் ஜோசப் ராஜ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.