சாதிகள் இல்லா உலகம்

சாதிகளும் உள்ளதடி பாப்பா! இன்று
சாதனைகள் பள்ளியிலே செய்தல் உன்னை
சாதியாலே இடமென்று ஒதுக்கித் தள்ளி
சாதனையை வீழ்த்திடுவார் சட்டம் சொல்லி
வீதியிலே நிற்கின்றார் இதனால் பல்லோர்
விடுதலைதான் பெற்றநாட்டில், சாதியாலே
பாதியிலே படிப்பதனை விட்டு மாற்றுப்
பாதையிலே சென்றாரே இளைஞர் கூட்டம்!
சாதியாலே சங்கங்கள் அமைத்தே தங்கள்
சாதிக்கே கொள்கைகளை வகுத்தார் நன்றே!
வீதியிலே தம்கொள்கை விளக்கக் கூட்டம்
விரைந்தே நல்விழாவுமே எடுத்தார் அன்றே!
ஆதியிலே இருந்த சாதி அடிமைப்பட்டு
ஆண்டுபல ஆனபின்பும் குழயில் ஆழ்ந்து
நாதியின்றி அழிந்ததென்று அவரே சொல்லி
நாடாளுமன்றத்தில் குரலே கொடுக்க
நமக்குமொரு உறுப்பினரே வேண்டும் என்று
நல்லதொரு நாளிலே புதிய கட்சி
தமக்கென்று தோற்றுவித்தார், மெல்ல மெல்ல
தம்சாதி அரசியலை விதைத்து வைத்தார்!
சமரசங்கள் பலவுமவர் செய்து எங்கும்
சந்திக்கும் இனத்தவரைத் திரட்டி ஒன்றாய்
விமர்சனங்கள் எழுந்தாலும் கவலை இன்றி
விரைந்துவந்த தேர்தலிலே அவரும் நின்றார்!
நாட்டுநலன் மறந்தே போட்டி போட்டு
நடத்திவைத்தார் அடிதடிகள் வெட்டுக்குத்து
வீட்டிலுள்ள சொத்தையுமே செலவு செய்து
வீரமுடன் சாதியாலே சண்டை செய்தார்
காட்டினிலே வாழுகின்ற விலங்கு போலே
கண்காணா கடல் வாழும் உயிர்கள் போலே
எட்டு திக்கும் காணாத சாதிப்பேய்க்கே
எல்லோரும் ஒன்றாக ஒழிதல் சொல்வோம்!
பாதிக்கப்படுவோரின் உயர்வு எண்ணி
பள்ளி மாற்றுச்சான்றிதழில் மாணவர்க்கெல்லாம்
சாதிக்கு மாற்றாக இரத்த வகை
சத்தமின்றி மாற்றுதற்கு வகையே செய்தால்
ஜோதிகண்ட பக்க்தன்போல் ஒன்றயாய் மக்கள்
ஜோடிக்கை கூப்பி நன்றி சொல்வார்
தேதி எண்ணி காத்திருப்போம்! நேசம் காத்து,
தேசப்பிதா சாதியொழிக்க பிறப்பார் மீண்டும்!
- சி. அருள் ஜோசப் ராஜ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.