இயற்கையினைப் பாதுகாத்து... இன்பம் காண்போம்!

குடிநீர் தரும் நிலையை
இடித்துவிட்டு விதவிதமாய்
வீடுகளும் கட்டினோமே...!
படிக்கின்ற பள்ளிக்கூடம் கல்லூரியெல்லாம்
பாராது ஏரிதூர்த்து உருவாக்கினோமே...!
பள்ளமாய் நீர்தேங்கும் குளத்தையெல்லாம்
பார்த்துப் பார்த்துத் தூர்த்துவிட்டு
பலமாடிக் கட்டிடத்தைக் கட்டினோமே...!
நீர் தேங்கும் இடமெல்லாம்
பலர் தங்கும் விடுதியாச்சே...!
மழைவெள்ளம் வருமென்று தெரிந்திருந்தும்
மெளனமாய் அந்நினைவை ஓரங்கட்டி
அடுக்குமாடிக் குடியிருப்பால் ஆற்றைத் தூர்த்து
அழகழகாய் அடுக்ககத்தை அடுக்கி விற்றார்
அற்ப மனம் படைத்தோரெல்லாம்
வாரியினை அடைத்தங்கே
கடைகள் கட்டி குப்பைகளைக் கொட்டி அங்கே
குவித்தார் நாளும்...
மழைநீரும் வந்தங்கே சூழ்ந்தபோது
வாயினிலும் வயிற்றினிலும் அடித்துக் கொண்டார்...!
வடியாதா வெள்ளமென தவங்கிடந்தார்...!
வறுமையே வந்ததென புலம்பி நின்றார்...!
தேராமல் குளம் ஆறு ஏரி வாரி தூர்த்ததனால்
வந்ததன்றோ இத்தகைய துன்பமெல்லாம்
முறையாக இயற்கையினைப் பேணி வந்தால்
இளம்பிறையாய் இயற்கை மழை இனித்திருக்கும்...!
மனமெல்லாம் பணவெறியே நிறைந்ததனால்
மனச்சான்று விற்றுவிட்டு மலையைத் தின்றோம்
மழைவெள்ளம் வடிகின்ற வடிகாலெல்லாம்
மழைதேங்கும் ஆறுகுளம் ஏரியெல்லாம்
மளமளவென மடிநிரப்பும் பணமேயாச்சு...!
இடியிடித்து மழைஅங்கே பெய்யும்போது
அடிவயிற்றில் புளிநன்று கரைக்கின்றதே
நம்முன்னோர் மழைவரவைக்
கொண்டாடினாரே...
மழைவெள்ளம் வந்தபோது அவருள்ளத்தில்
மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியதே...!
இயற்கையான நீர்நிலைகள் கொன்றதாலே
மழை நமக்குப் பகையுமாகி
மகிழ்ச்சி கொல்லும் காலனாச்சு...
இனியேனும் இயற்கையினை மீறாது பாதுகாத்து
இணைந்தே நாம் பணிசெய்து இனிதே வாழ்வோம்...!
இயற்கையினைப் பாதுகாப்போம்...! இன்பம் காண்போம்...!!
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.