தன்நிறைவு பாரதமாக்குவோம்...!
சுதந்திரம் வென்றோம்
சுகம்பல கொண்டோம்
இனம் மதம் மொழி
வெவ்வேறென்றாலும்
வளர்ச்சியின் சிகரத்தில்
வல்லரசு கொடி ஏற்றுவோம்...
குமரி இமயச் சாலையில்
சுயநலமான பிரிவினை
விபத்தினைத் தடுப்போம்...
பொதுவென்ற ஒற்றுமை
பயணத்தில் எப்போதும்
அருகமரும் இந்தியர்களென
மனம் மகிழ்ந்திருப்போம்...
விட்டுக்கொடுத்தலில்
தீய வேற்றுமை அகற்றி
சந்திப்பு நேரங்களில்
சகோதரப் புன்னகை தூவி
புரிந்துணர்வில் இணைந்து
வாழ்க்கை கமழும்
வாடாதப் பூக்களாவோம்...
தேசமெங்கும்
பசுமையே படர்ந்திருக்க
நதிநீர் இணைப்பில்
ஈரங்கொண்ட பூமியில்
விவசாயச் செழுமையில்
பொருளாதார வளமையில்
தன்நிறைவு பாரதமாக்குவோம்...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.