அணிலோடுந் தென்னை

மகனோ இலண்டனில் மகளோ சென்னையில்
தகவுள துணையோ தவித்திடு மாறு
என்னிற் பிரிந்து இறையடி சேர்ந்தார்
தன்னந் தனியே தாங்கொணாத் துயருடன்
என்றன் இல்லில் இருக்கப் பயந்து
தென்னந் தோப்பில் தேற்றங் கொண்டு
என்பெரும் பொழுதை இயன்ற வரைக்கும்
கன்னந் தன்னில் கண்ணீர் வழியக்
கழித்து வந்தேன்; களிப்புத் தந்தன
சுழித்துத் தென்னை மரங்களில் ஓடும்
அணில்கள் தாமே; அன்றொரு நாளில்
அணில்கள் இரண்டு ஆடி யோடி
அழகாய்த் தென்னையில் ஏறி இறங்கி
பழக்கம் போட்டன; பரவசத் துடனே
பார்த்து மகிழ்ந்தேன்; பார்த்த அவைகள்
நேர்த்தி யான நேரிணை யாமே
ஆடிக் களித்த அவைகள் இரண்டும்
ஊடிக் கீழே இருந்த புதரின்
உள்ளே சென்று ஒளிந்து மறைந்தன
மெல்லச் செடிகள் மிடுமிடுத் தாடின.
உள்ளே யவைகள் உல்லா சமாக
உள்ளன வென்று உவகை கொண்டு
நான்மகிழ்ந் திருக்க நடுங்கி ஆணணில்
ஊன்உறை யக்கத் தியோடி வந்தது.
என்ன நடந்தது எனவறிய நானும்
சின்னஞ் சிறிய சிறுகினை யெடுத்துப்
புதரினை விலக்கிப் புகுந்து பார்த்தேன்.
குதறி இணையைக் கொடிய சாரை
விழுங்கிடக் கண்டு விழுந்தோடி வந்து
புழுங்கித் துடித்தேன்; பொறிகலங்கி நின்றேன்
*****
“அணிலே அணிலே அழகிய அணிலே
துணையைக் காக்கத் துணிவில்லாமல்
ஓடிவந் தாயே உன்னைப் போன்றே
தேடிவந் தென்றன் தேன்மொழி யாளைச்
சாடித் தூக்கிச் சென்ற காலனை
நாடிப் பிடித்து நையப் புடைத்துக்
காலால் மிதித்துக் காக்க முடியா
ஏலாக் கொடிய இழிஞன் நானே!”
சொற்பொருள்:
(பழக்கம் - இணக்கம், நேரிணை - உடன்பாடுள்ள இணை, மிடுமிடுத்து - வேகமாக, குதறி - உதறி, சாரை - சாரைப் பாம்பு, ஏலா - இயலாத)
- த. கருணைச்சாமி, தேனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.