நாமும் தேடுவோம்...!

பத்தாத பணம்பத்தும் செய்யும் என்பார்!
பணத்தாலே சாதித்து விடலாம் என்பார்!
பத்துதொழில் பணமில்லாதவர் சொல்வார்! செய்வார்!
பணம்செய்ய பறந்துபோவார் நாட்டை விட்டும்!
பத்துபண்பும் மறந்துபோவார்! நாட்டில் என்றும்
பகட்டாக வாழ்ந்திடவே விருப்பம் கொள்வார்!
பத்துபொருள் சேர்த்திடவே சேமிப்பும் செய்வார்!
பணமதிலே நம்பிக்கை தானே கொள்வார்!
பணத்தாலே பதவிக்கு வந்திடுவார்
பதவிக்கு வந்தாலோ பணத்தாசையே
குணத்தாலே கொண்டிடுவார்! செலவு செய்ய
குறுக்குவழி வரவுகொள்வார்! நெடுநாள் பெற்ற
மணமொத்த மரியாதை இழந்து நிற்பார்!
மனிதரென்ற மாண்பு நீங்கி விலங்காய் இருப்பார்!
பணமென்ப தென்னவென்று அறிவார் இன்று!
பண்டமாற்று முறைநீங்க வந்த ஒன்று !
மரியாதை பெற்றுஇன்று மதிப்பு கூட்டும்
மகத்தான காகிதமாய் உருவெடுத்து
வேரின்றி விழுதாகித் தழைக்க, வட்டி
வேண்டிகடன் ஈவார்தம் பணத்தை, மெல்ல
வரியின்றி வருமானம் பெறுவார் நன்று!
வணக்கமும் பூசையும்நம் பணத்திற்குண்டு!
நரிகுணத்தார் கள்ளநோட்டு அச்சடித்து
நம்பொருளாதாரம் சீர் குலைப்பார்! எங்கும்
கவைமனதார் பணத்திற்கே கொலை செய்வார்!
கருவூலம் வங்கியென்று களவு செய்வார்!
இவையெல்லாம் போதாதென்றே இணைந்த பல்லோர்,
இணையதள பணவிற்பனையை நாட்டில்,
சேவையாகத் தொடங்கிவிட்டார் என்ற செய்தி
சுதந்திர இந்தியாவைப் பிளந்திடவே,
தேவையின் பயணத்தில்நம் பணமே இன்று
தேடலைத் தொடங்கநாமும் பணத்தைத் தேடுவோம்!
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.