சென்னையின் புலம்பல்!

என் பெயர் சென்னை
இப்போதெல்லாம் முகம் சுழிக்கிறீர்கள்
பெரிய நீராயுதம் என் நிலைப்பாட்டை
மொத்தமாக நிர்கதியாக்கிவிட்டது...
'பட்டணம்'
இந்த வரலாற்று ராஜமுத்திரையில்
மாசிபடிந்து கொண்டிருக்கிறது
தேங்கிய தண்ணீரெல்லாம் வற்றுகிறது...
என் வாசம் பிடித்துத்தானே
வந்து வந்து இங்கே சுவாசித்தீர்கள்
இப்போது ஏன் நாசி பொத்துகிறீர்கள்
கழிவுகள் உங்களோடு கலந்துள்ளதால்...
வாழ்வாதாரம் தேடியவர்க்கெல்லாம்
கொடையாகத்தானே இருந்தேன்
குடைகொள்ளா மழையின் வருகையால்
தடையில்லா வழித்தடமில்லையே
ஆகவே குடியிருப்புக்குள் நீர்வேக தஞ்சம்...
சேதாரம் அதிகம் என்றாலும்
ஆதாயம் தேடுவோரைப் பாருங்கள்
அரசியல் முகமுடி போட்டுக் கொண்டு
அலைகிறார் வீதி வீதியாக...
எனக்குள்தான் எல்லாமே
அடுத்த வீட்டார் சாலையில் எதிர்பட்டோர்
யாறென்ற அறியமுயலா துரித வாழ்க்கை
வெள்ளம் அள்ளிச் சுருட்டிய பாதிப்பில்
அனைவரும் ஒன்றென்ற படிப்பினையோடு
நிவாரணம் பெறுதல்...
எனது வெற்றிடங்களை மேவி மேவி
ஆக்கிரிமித்து ஏக கட்டிடமாக்கினீர்கள்
இன்று பட்டினியாகக் கிடந்து,
உணவுப் பொட்டலம் தேடி
வெற்றிடங்கள் நோக்கி காத்திருந்து ஓடுகிறீர்கள்...
என்னில் எது அசிங்கம் என்று ஒதுக்குவீர்களோ...
அந்தக் கூவம்தானே அடங்காத நீரையெல்லாம்
தனக்கான கடமையென கடல் கொண்டு சேர்த்தது...
எனது வடிகால் ரேகைகளை அழிக்க வேண்டாம்
தாய் மடியாய் அனைத்துக்கும் உயர்ந்திருப்பேன்...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.