நெல்மணி
பசிப்பிணியைப் போக்குகின்ற மருந்து, நல்ல
பாருக்குள் வாழ்மக்கள் நாளும் போற்றும்
விசும்பின்கீழ் வயல்வெளியில் உழைக்கும் தெய்வ
உழவர்கள் நாட்டிற்கே கண்கள், செய்யும்
பசும்பொன்தான் விளைக்கின்ற பயிர்கள் ஈயும்
பன்மணிகள் நெல்மணிகள் பஞ்சம் போக்கும்,
உசுராகும் உயர்வாகும் அவர்கள் வாழ்வில்
உயராமல் போகும்நா டென்ன நாடே!
விதைநெல்லை விற்றுவிடும் நிலைமை இங்கு
வேதனையில் கண்விற்று காட்சி காணும்
பதைபதைத்த நெஞ்சத்தைக் காட்டும் அந்தப்
பரிதாப நிலையிங்கு மாற்றம் காண
வதைகின்ற உழவர்தம் வாழ்வில் ஏற்றம்
வகையாக ஏற்படுத்தும் நாளே பொன்னாள்.
கதையெல்லாம் வேண்டாம்நற் செயல்கள் ஆற்றி
கண்முன்னே உயர்த்தும்நா டேபொன் நாடாம்.
நெல்மணிதான் திருவாகும் பெருக்கும் செல்வ
நிறையாகும் நாட்டிற்கே வளத்தைக் கூட்டும்.
நெல்மணிதான் கண்மணியாம் நேரில் காணும்
நிறைவான செல்வமாம்நன் னலத்தைக் காட்டும்.
நெல்மணிதான் வித்தாகும் பெருகும், பல்கும்.
நீள்காலம் உயிர்க்கெல்லாம் அமுதை யூட்டும்.
நெல்மணிதான் சத்தாகும் நிலத்தாய் போற்றி
நிலையான வாழ்க்கைக்கோர் உரமாய்க் கொள்வோம்!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.