வாழ்ந்து பார்ப்போம்...!

எல்லோரும் நன்றாக வாழ வேண்டும்
எத்தர்களின் மனநிலையும் மாற வேண்டும்
ஒன்றாக நன்றாக இருத்தல் வேண்டும்
ஒற்றுமையைக் குலைப்போர்கள் ஒழிய வேண்டும்
ஒருமனதாய் உழைக்கின்ற எண்ணம் வேண்டும்
நல்லோர்கள் ஒன்றாகக் கூட வேண்டும்
அல்லோர்கள் அல்லலுற்று மாய வேண்டும்
அன்பின்றி நடிப்போர்கள் அணுங்க வேண்டும்
உள்ளத்தில் கள்ளம் வைப்போர் ஒழிதல் வேண்டும்
உருப்படியாய் உழைப்பவர்கள் உயர வேண்டும்
தன்னலமே பேணுவோர்கள் தளர வேண்டும்
தகைசான்ற பெரியோர்கள் உயர வேண்டும்
உள்ளத்தில் நல்லெண்ணம் ஏற்பட்டாலே
எல்லோரும் இன்புற்று நன்றாய் வாழ்வர்
கள்ளமில்லா மனத்துடனே வாழ்ந்திட்டாலே
கலக்கமில்லா நலவாழ்வு அமையுமன்றோ?
மிகு செல்வம் பெற்றுவிட்டோம்என்றே எண்ணி
மிகு செயல்கள் செய்வதிங்கு பாவமன்றோ?
ஒழுக்க மிலா வாழ்வதனைச் சூதுகவ்வும்
ஒழுக்கம்தான் உலகோரை உயர்த்தி வைக்கும்
விதிமீறி எதையும் நாம் செய்தல் வேண்டாம்
விதிப்படியே நடதிடுவோம் வெற்றிகொள்வோம்
நெறியல்லா வாழ்வெல்லாம் வழ்வும் ஆகா
நெறிநின்றார் வாழ்க்கை என்றும் தாழ்ந்து போகா...!
அன்புநெறி அதுவொன்றே அகிலம் காக்கும்!
அகவாழ்வும் புறவாழ்வும் சிறக்கும் அன்பால்
அகமதுவே அன்பாலே தூய்மையாகும் !
வள்ளுவரின் நெறிவழியே வாழ்ந்திட்டாலே
வாழ்க்கை பலாக் கனிபோல இனிக்கும் நன்றாய்!
வம்புதும்பு விட்டிங்கு அன்பாய் வாழ்வோம்!
வளமான வாழ்க்கையினை வாழ்ந்து பார்ப்போம்!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.