நற்பொங்கல் பொங்கிடுவோம்
பொங்கிடுவோம் பொங்கிடுவோம்
நற்பொங்கல் பொங்கிடுவோம்
பாபருக்கும் இராமருக்கும்
பகைமையினை நீக்கியே
தூபமிடும் மதவெறியைத்
துரத்தித்தூர விரட்டியே
பொங்கிடுவோம் பொங்கிடுவோம்
நற்பொங்கல் பொங்கிடுவோம்
இலஞ்சத்தை ஊழலினை
இல்லையென ஓட்டியே
நலத்திட்டப் பலன்களெல்லாம்
நலிந்தோர்கள் கைசேர்த்தே
பொங்கிடுவோம் பொங்கிடுவோம்
நற்பொங்கல் பொங்கிடுவோம்
சாதிவெறி வன்முறையைச்
சாய்த்துமனம் ஒன்றாக்கியே
நீதிநெறி நேர்மையிலே
நிலைத்தநல வாழ்வாக்கியே
பொங்கிடுவோம் பொங்கிடுவோம்
நற்பொங்கல் பொங்கிடுவோம்
சொல்லின்றி உழைப்பினிலே
செழிக்கின்ற வளமாக்கியே
நல்வழியில் அறிவியலால்
நாட்டுநிலை உயர்வாக்கியே
பொங்கிடுவோம் பொங்கிடுவோம்
நற்பொங்கல் பொங்கிடுவோம்
ஈழத்துத் தமிழர்தம்
இன்னலெல்லாம் போக்கியே
வாழவழி செய்தவரின்
வாழ்வில்ஒளி ஏற்றியே
பொங்கிடுவோம் பொங்கிடுவோம்
நற்பொங்கல் பொங்கிடுவோம்
செங்கரும்பு கதலியொடு
செந்நெல்லின் மணிகுவித்து
மங்கலமாய் மஞ்சளெழில்
மனையெல்லாம் திகழவைத்தே
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.