பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்
தமிழர் திருநாள் பொங்கல்
தை முதல் நாள் வந்திடும்
இன்பத்தை அள்ளித் தந்திடும்.
திருநாள் ஒருநாள் என்றாலே
மனதில் மகிழ்ச்சி பொங்கிடும்
நான்கு நாள் திருநாளாம்
நல்ல தமிழர் திருநாளாம்.
பழையதைக் கொளுத்தியே
பறையடித்து மகிழ்ந்திடும்
மார்கழி கடைசியில் வரும்
போகிப்பொங்கல் முதல்நாள்
சூரியனை வணங்கியே
நன்றி சொல்லி பொங்கலிடும்
நல்ல தை ஒன்றில் வரும்
பொங்கல் திருநாள் இரண்டாம் நாள்
உழவுக்குதவும் மாட்டையும்
மதித்துப் பொங்கல் வைத்திடும்
மாட்டுக்கான திருநாளாம்
மாட்டுப் பொங்கல் மூன்றாம் நாள்.
வயதில் மூத்த பெரியோரையும்
தொழில் தந்த முதலாளியையும்
கண்டு ஆசி பெற்றிடும்
காணும் பொங்கல் நான்காம் நாள்.
கட்டுக் கட்டாய் கரும்பும்
குலை குலையாய் வாழையும்
வீடு எங்கும் நிரம்பும்
மகிழ்ச்சி பொங்கும் பொங்கலிலே.
தமிழர் திருநாள் பொங்கலிலே
தமிழர் பண்பாட்டை போற்றிடுவோம்
அழிந்து வரும் கலைகள் பலவற்றை
அரங்கேற்றி மகிழ்ந்திடுவோம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.